சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பாகிஸ்தான் அரசு பின்பற்றத் தவறிவிட்டதாக அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட மருத்துவரும் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த மூன்று வருடங்களாக சிறை த…
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பாகிஸ்தான் அரசு பின்பற்றத் தவறிவிட்டதாக அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட மருத்துவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த மூன்று வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 73 வயதான இம்ரான் கானுக்கு, அவரது வலது கண்ணில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மருத்துவக் குழு பரிந்துரைத்திருந்தது. மீண்டும் சிறைக்கு
இதன் அடிப்படையில், அவரை 'அடியாலா' சிறையிலிருந்து 'ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு' உடனடியாக மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது.
எனினும், இம்ரான் கான் ஷிஃபா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல், அரசினால் நிர்வகிக்கப்படும் 'பிம்ஸ்' மருத்துவமனைக்கு நள்ளிரவில் அழைத்துச் செல்லப்பட்டு சில மணிநேர பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் அடியாலா சிறைக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இம்ரான் கானின் சகோதரி உஸ்மா கான் மற்றும் அவரது தனிப்பட்ட மருத்துவர் பைசல் சுல்தான் ஆகியோர், அரசாங்கம் நீதிமன்ற உத்தரவை முழுமையாக மீறியுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டதால் ஏற்பட்ட பாதுகாப்புச் சூழல் காரணமாகவே அவர் பிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பாகிஸ்தான் செய்தித்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், அவர் தகுதிவாய்ந்த மருத்துவக் குழுவினால் பரிசோதிக்கப்பட்டு ஆரோக்கியமாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட பின்னரே மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அரசின் இந்த நடவடிக்கையானது நீதிமன்ற அவமதிப்பு எனத் தெரிவித்துள்ள இம்ரான் கானின் 'பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்' கட்சி, இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.












