கட்டுமானத் துறைக்குத் தேவையான பொருட்களை இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் கும்பலொன்று இயங்கி வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.அஸ்பெஸ்டாஸ், சீமெந்து உள்ளிட்ட கட்டிட நிர்மாணப் பொருட்களை சந்தை விலையை விடக் குறைந்த விலையில் விற்…

கட்டுமானத் துறைக்குத் தேவையான பொருட்களை இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் கும்பலொன்று இயங்கி வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.அஸ்பெஸ்டாஸ், சீமெந்து உள்ளிட்ட கட்டிட நிர்மாணப் பொருட்களை சந்தை விலையை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, அதன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களைப் பெறுவதே மோசடி கும்பலின் ஆரம்ப நடவடிக்கையாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஆர்டர் கிடைத்த பின்னர், வாடிக்கையாளர் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள கட்டிடப் பொருள் விற்பனையாளர் ஒருவரை தொடர்புகொண்டு, அவரது ஊடாக குறித்த பொருட்களை வாடிக்கையாளரின் முகவரிக்கு விநியோகிக்க மோசடியாளர்கள் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொருட்கள் வாடிக்கையாளரின் முகவரியைச் சென்றடைந்ததும், மோசடியாளர்கள் வாடிக்கையாளரை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு, தங்களது வங்கிக் கணக்கில் பணத்தை உடனடியாக வைப்புச் செய்யுமாறு அறிவுறுத்துவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதனையடுத்து வாடிக்கையாளர் பணத்தை வங்கிக் கணக்கில் வைப்புச் செய்த பின்னர், பொருட்களை விநியோகித்த சாரதி அதற்கான பணத்தை கோரும்போதே, தாம் மோசடிக்கு உள்ளாகியிருப்பதை பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்து கொள்வதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான இணையவழி மோசடி சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சமூக வலைத்தளங்களில் குறைந்த விலையில் கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வெளியாகும் விளம்பரங்களை நம்பி முன்பணம் செலுத்துவதற்கு முன்னர், விற்பனையாளரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமாறும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை தவிர்க்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.