இலங்கையில் இணையவழி நிதி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2026ஆம் ஆண்டில் இதுவரை 27 சம்பவங்கள் தொடர்பில் 1,093 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் செய்தித் தொடர்பாளர் உதவிப் பொலிஸ் அத்த…

இலங்கையில் இணையவழி நிதி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2026ஆம் ஆண்டில் இதுவரை 27 சம்பவங்கள் தொடர்பில் 1,093 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) எஃப்.யு. வூட்லர் வழங்கிய தகவலின்படி, 2025ஆம் ஆண்டு இரண்டு சைபர் குற்றச் சம்பவங்கள் தொடர்பில் 26 வெளிநாட்டினரும், 2024ஆம் ஆண்டு 26 சம்பவங்கள் தொடர்பில் 573 வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சோதனை நடவடிக்கைகள், கைது நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு பிரசாரங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இணையவழி மோசடிகளால் இலங்கையர்கள் மட்டுமன்றி வெளிநாட்டினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டினரை நாடு கடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதிசார் குற்றங்களை தடுப்பதில் அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டினருக்கு வீடுகள், ஹோட்டல்கள் அல்லது வணிக வளாகங்களை வாடகைக்கு வழங்கும்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வெளிநாட்டு வாடகைதாரர்களின் வணிகப் பதிவு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து, அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதுடன், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் வீட்டு உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.