(நெவில் அன்தனி) பெல்ஃபாஸ்ட், ஸ்டோமொன்ட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து 34 ஓட்டங்களால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஈட்டியது. அயர்லாந்தின் இந்த வெற்றியில் அணித் தலைவர் லோக்கன் டக்கர் குவித…

(நெவில் அன்தனி) பெல்ஃபாஸ்ட், ஸ்டோமொன்ட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து 34 ஓட்டங்களால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஈட்டியது.

அயர்லாந்தின் இந்த வெற்றியில் அணித் தலைவர் லோக்கன் டக்கர் குவித்த அரைச் சதம், அறிமுக வீரர்களான மெட் ஹொலார்ட், ஜெய் மூந்த்ரா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன முக்கிய பங்காற்றின. சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியாவை அயர்லாந்து வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும். மேலும் இந்தியாவுக்கு எதிரான 9ஆவது ரி20 போட்டியிலேயே அயர்லாந்து முதலாவது வெற்றியை ஈட்டியது. இதில் விசித்திரம் என்னவென்றால் ஐபிஎல் இல் அசத்திய இந்தியர்கள் அயர்லாந்தில் சரண் அடைந்ததாகும். அத்துடன் இந்தத் தோல்வி நடப்பு ரி20 உலக சம்பியன் இந்தியாவுக்கு பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய அணியில் நால்வர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் அவர்களில் இருவர் மாத்திரமே 20 ஓட்டங்களைக் கடந்தனர். இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரை சமப்படுத்துவதாக இருந்தால் இந்தியா சிறந்த வியூகங்களுடன் விளையாட வெண்டி வரும். பெல்ஃபாஸ் விளையாட்டரங்கில் பவுண்டறி எல்லைகள் நீண்டதாக இருந்தது. ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. இம்ப்பெக்ட் வீரர்கள் என்ற பேச்சுக்கு இடம் இல்லை. இந்த பிரச்சினைகள் அனைத்தையும் இந்திய அணி அடுத்த போட்டியில் தீர்க்கவேண்டியுள்ளது. இந்திய அணியில்   இளம் புயல் வைபவ் சூரியவன்ஷி அறிமுக வீரராக இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நிகழவில்லை. இரண்டாவது போட்டியில் அவரை இந்தியா அறிமுகமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்த 182 ஓட்டங்களைப் பெற்றது.

லோக்கன் டக்கர் 50 ஓட்டங்களையும் கெரத் டிலேனி 49 ஓட்டங்களையும் பெற்றதுடன் 5ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர். பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 183 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்த 148 ஓட்டங்களைப்  பெற்று தோல்வி அடைந்தது. அபிஷேக் ஷர்மா 49 ஓட்டங்களையும் ஷிவம் டுபே 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மெட் ஹொலார்ட் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெத்யூ ஹம்ப்ரீஸ் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெய் மூந்த்ரா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: மெட் ஹொலார்ட்