இந்தோனேசியாவின் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல கட்டடங்களும் வீடுகளும் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், உடனடியாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அ…

இந்தோனேசியாவின் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல கட்டடங்களும் வீடுகளும் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், உடனடியாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தோனேசிய நேரப்படி அதிகாலை 5:58 மணியளவில் புளோரெஸ் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள எண்டே நகரத்திற்கு வட-வடமேற்கே 68 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது. முதல் அதிர்வைத் தொடர்ந்து பல தொடர் அதிர்வுகளும் ஏற்பட்டு மேலதிக சேதங்களை உருவாக்கியுள்ளன. கிழக்கு நுசா தெங்காரா, மேற்கு நுசா தெங்காரா, தெற்கு சுலாவேசி மற்றும் தென்கிழக்கு சுலாவேசி ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இந்தோனேசியாவின் வானிலை, காலநிலையியல் மற்றும் புவிப்பௌதிகவியல் முகவர் நிறுவனம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் கடற்கரைகள் மற்றும் ஆற்றங்கரைகளை விட்டு விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் உடனடியாக உயர்ந்த நிலப்பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தின் தாக்கம் புளோரெஸ் தீவின் பெரும்பகுதியில் உணரப்பட்டது. கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தின் சிக்கா பகுதியில் உள்ள பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த கட்டடங்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் குறித்த உத்தியோகபூர்வ மதிப்பீடுகளை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. இதேவேளை, இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை கிடையாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.