Courtesy: Thavaseelan shanmugam முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ம…

Courtesy: Thavaseelan shanmugam

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நேற்று(31.07.2026) நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.காணிகளை விடுவிக்க நடவடிக்கைமேலும் தெரிவிக்கையில், தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாட்டின் 25 மாவட்டங்களிலும் முப்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்படும் அசாதாரண மற்றும் இடர் நிலைமைகளின் போது பொலிஸாருடன் இணைந்து முப்படையினர் களப்பணியாற்றுகின்றனர்.

போர் நிறைவுற்ற 2009 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 9,480 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 615 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் மூலம் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம், எனத் தெரிவித்துள்ளார்.திருவிழாக் காலங்களில் கனகாம்பிகைக்குள முகாம் அமைந்துள்ள வீதியைப் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் பிரதியமைச்சர் ஏற்றுக்கொண்டார். மேலும், அப்பகுதியில் இராணுவக் கட்டடத்துடன் உள்ள காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினரால் 8.5 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ள நிலையில், கோயில் நிர்வாகத்தால் அத்தொகையைச் செலுத்த முடியாதிருப்பதை மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டியதையடுத்து, அதனை மீள்பரிசீலனை செய்யவும் பிரதியமைச்சர் இணக்கம் தெரிவித்தார்.காணி உரிமையாளர்கள் சார்பில்கடந்த மே மாதம் பாதுகாப்பு பிரதியமைச்சரால் பார்வையிடப்பட்ட இயக்கச்சியிலுள்ள காணியை இன்னும் 3 மாதங்களுக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத்தினர் இதன்போது தெரிவித்தனர்.

வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவு காணி உரிமையாளர்கள் சார்பில் கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு முன்பாக, அப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை நிறைவுசெய்து காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதியமைச்சர் உறுதி அளித்தார்.

கேப்பாபிலவில் உடனடியாக 6.5 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், எஞ்சிய காணிகளை விடுவிப்பது தொடர்பில் மாவட்ட மட்டத்தில் குழுவொன்று அமைக்கப்பட்டு, கள நிலைமைகளை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.திலகநாதன், வன்னிப் பிராந்தியக் கட்டளைத் தளபதி, கிழக்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.