இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 21 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சுயாதீன விசாரணை கோரி சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டுக்குச் சுகாதார அமைச்சு இதுவரை எந்தவித பதிலும்ளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 3 ஆம் திகதி நிமோனியா காய்ச்சல…

இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 21 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சுயாதீன விசாரணை கோரி சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டுக்குச் சுகாதார அமைச்சு இதுவரை எந்தவித பதிலும்ளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 3 ஆம் திகதி நிமோனியா காய்ச்சல் காரணமாக இரத்தினபுரி போதனா மருத்துவமனையின் 13 ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்ட தனது மகளின் மரணம் குறித்து, அவசியமான சுயாதீன விசாரணையை உடனடியாக ஆரம்பிக்குமாறு உயிரிழந்த பெண்ணின் தந்தை சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடும்பத்தினர் தொடர்ச்சியாக மருத்துவக் கவனத்தை நாடியபோதிலும், நோயாளியின் உடல்நிலை மோசமடைந்ததாகத் தந்தை தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். கடுமையான நெஞ்சுவலி, வாயில் இரத்தம் கசிதல், தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அவரது புகார்களுக்குப் போதுமான சிகிச்சையளிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டபோது அவரது குருதி ஒட்சிசன் அளவு 85 சதவீதமாகக் குறைந்திருந்ததாகவும், ஒட்சிசன் வழங்கப்பட்ட போதிலும், சிகிச்சை அளிக்கும் மருத்துவக் கலந்தாலோசகருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை எனவும், அவசர மருத்துவ மேற்படிப்பிற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நோயாளி விடுதியில் மாரடைப்பிற்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார். மருத்துவப் பதிவுகள், தாதியர்களின் குறிப்புகள், அவதானிப்பு வரைபடுகள், மருந்துச் சீட்டுகள் மற்றும் தொடர்புடைய மருத்துவ மற்றும் தாதியர்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தந்தை கோரியுள்ளார்.

சடலத்தின் மீதான திசு நோயியல் பரிசோதனை (Histopathological examination) முடிவுகள் வரும் வரை, நிமோனியா காய்ச்சலே மரணத்திற்கான தற்காலிகக் காரணமாகச் சட்ட மருத்துவ அதிகாரியால் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, முறைப்பாட்டினை மருத்துவமனை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு மரணத்திற்கான சூழ்நிலைகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் இரத்தினபுரி போதனா மருத்துவமனை பணிப்பாளர் டாக்டர் ஏ.டி.எச். ஜெயதிலக முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தார்.

எப்படியிருப்பினும், மருத்துவமனை மட்டத்தில் இது குறித்த ஆரம்பகட்ட விவாதங்கள் தொடங்கப்பட்டுள்ள போதிலும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகச் சுகாதார அமைச்சு இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை எனவும், சுயாதீன விசாரணை குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் 'டெய்லி மிரர்' (Daily Mirror) ஊடகத்திற்கு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.