மற்றொருவரிடம் இரவல் பெற்ற காரை ஓட்டிச் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் ஒருவரின் குடும்பத்தினர், அந்த காரின் உரிமையாளரின் தனிப்பட்ட விபத்து காப்பீட்டுத் தொகையை (Personal Accident Insurance), மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தின் (MACT) மூலம் கோர முடியாது என்ற…
மற்றொருவரிடம் இரவல் பெற்ற காரை ஓட்டிச் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் ஒருவரின் குடும்பத்தினர், அந்த காரின் உரிமையாளரின் தனிப்பட்ட விபத்து காப்பீட்டுத் தொகையை (Personal Accident Insurance), மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தின் (MACT) மூலம் கோர முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உதே சிங் என்பவர் தனது தந்தையின் இன்னோவா காரை ஓட்டிச் சென்றபோது, தெரியாத அதிவேக லொறி ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளானார். காரில் இருந்த உதே சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, உதே சிங்கின் தாய் சிம்பல் சிங், தனது மகன் காரில் பயணித்தவர் (Occupant) என்பதால், அந்த காரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் (Comprehensive/Package Policy) கீழ் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தார். ஏப்ரல் 2025-ல், இது ஒப்பந்தம் சார்ந்த விவகாரம் என்பதால் தங்களுக்கு அதிகார வரம்பு இல்லை என்று கூறி, அந்த மனுவை MACT தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.
நீதிமன்றத்தின் கருத்து:
வழக்கை விசாரித்த நீதியரசர் அனிஷ் தயாள் கூறியதாவது:
மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 166-ன் கீழ் இழப்பீடு கோருவதற்கு, மற்றொருவர் செய்த அலட்சியத்தையோ அல்லது தவறை நிரூபிக்க வேண்டும். விபத்தை ஏற்படுத்திய லாரி கண்டுபிடிக்கப்படாத நிலையில், காரை ஓட்டிய உதே சிங்கின் அலட்சியத்தை மட்டுமே ஆராய முடியும். "மறைந்த ஓட்டுநரின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள், அவரே அலட்சியமாக ஓட்டினார் என்று கூறி அவரே இழப்பீடு கோருவது தர்க்கத்திற்குப் புறம்பான அபத்தமாகும்" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் தனிப்பட்ட விபத்து காப்பீடு என்பது ஒரு ஒப்பந்தம் சார்ந்த பலனே தவிர, மோட்டார் வாகனச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான கடமை அல்ல.
தீர்ப்பின் முக்கிய அம்சம்:
ஒருவர் காரை இரவல் பெற்றதற்காக அவரை 'மூன்றாம் நபர்' (Third party) என்று கருத முடியாது. மேலும், இது போன்ற ஒப்பந்தம் சார்ந்த இழப்பீட்டு விவகாரங்களை நுகர்வோர் நீதிமன்றம் அல்லது சிவில் நீதிமன்றத்தில் மட்டுமே கோர வேண்டுமே தவிர, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் (MACT) கோர முடியாது என்று கூறி, உயர் நீதிமன்றம் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

