பூநகரி - கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரவு வேளை வாகனங்களில் வந்தவர்களால் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால் கோபுரம் அமைக்கும் முயற்சி தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில்…
பூநகரி - கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரவு வேளை வாகனங்களில் வந்தவர்களால் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால் கோபுரம் அமைக்கும் முயற்சி தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
கிராஞ்சி பொன்னாவெளியை ஊடார்த்து சுமார் 238 ஏக்கர் பரப்பளவில் காற்றாலை திட்டம் ஒன்று அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அப்பகுதி மக்களின் பாரிய எதிர்ப்பை மீறி குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் 34 காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக இடம்பெற்று வருகின்றன.
இதன் பின்னணியில் இரவு வேளை வாகனத்தில் வந்த பெரும்பான்மை இனமொழியை பேசும் நபர்கள் எருமை தீவுப் பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்த நிலையில், பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கிய போதும் அவர்கள் குறித்த இடத்துக்கு வரவில்லை.
7ஆயிரம் தென்னங்கன்றுகள் அழியும் வாய்ப்பு இந்த நிலையில் ஊர் மக்கள் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது வாகனம் ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்குவதற்காக நிழல் கொட்டகை ஒன்றை இரவு வேளை அமைத்துள்ளனர்.
அவர்களிடம் விடயத்தை வினவியபோது, காற்றாலை திட்டத்தை கொழும்பிலிருந்து பார்ப்பதற்கும் தகவல் வழங்குவதற்கும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமைக்க வந்ததாக தெரிவித்தனர். நாங்கள் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என தெரிவித்து அவர்களின் பொருட்களை மீட்கச் சென்ற போது தாங்கள் வெளியேறுகிறோம் எனத் தெரிவித்து அந்த இடத்தில் இருந்து சென்றுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி அரசாங்க அதிபரை மறுநாள் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், “தனக்கு ஏதும் தெரியாது” என பதிலளித்தார். இந்த காற்றாலை திட்டம் கிராஞ்சி பொன்னாவெளியைச் சேர்ந்த சுமார் 2ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் குறித்த திட்டத்தினால் நேரடியாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
கற்றாலை அமைக்க திட்டம் போடப்பட்டிருக்கும் பகுதிகள் அதிகளவிலான தென்னை மரங்கள் காணப்படுகின்ற நிலையில், 12 காற்றாலை நிறுவும் இடங்களில் சுமார் 7 ஆயிரம் தென்னங்கன்றுகள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளன.
ஒரு காற்றாலையின் விட்டம் 165 மீட்டர் நீளம் கொண்ட நிலையில் ஒரு காற்றாலை அமைப்பதற்கு சுமார் 7 ஏக்கர் காணி கையகப்படுத்தப்படவுள்ளது.
பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம் ஒரு காற்றாலை 120 அடி நீளம் கொண்டதாக காணப்படுகின்ற நிலையில், நிலத்துக்கு கீழ் சுமார் 60 அடி நீளத்தில் பொருத்தப்படவுள்ள நிலையில் ஒரு காற்றாலைக்கு சுமார் 3000 தொடக்கம் 4000 ஆயிரம் பொதியில் அடைக்கப்பட்ட சீமெந்து செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மக்களின் எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தப் பிரதேசத்தின் வயல் நிலங்கள் ,வழிபாட்டு இடங்கள், மற்றும் நல்ல தண்ணிக் கிணறு என்பன பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளன.
மக்கள் வாழுகின்ற வளமான பகுதியை அழித்து அபிவிருத்தி என்ற போர்வையில் கனிம மண்ணையும் காற்றாலையையும் நிறுவும் திட்டத்தை கைவிட்டு குறித்த பிரதேசத்தில் மாற்றுக்காணியை தெரிவு செய்ய வேண்டும்.
ஆகவே மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கடிய திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன் என்றார்.












