அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் தீர்ப்பு ஒன்றினை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப…

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் தீர்ப்பு ஒன்றினை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 107(5) ஆம் உறுப்புரைக்கான திருத்தங்கள் தொடர்பில் மக்களின் விருப்பத்தை அறிந்துகொள்ள அரசியலமைப்பின் 13ஆவது அத்தியாயத்திற்கு அமைவாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22ஆவது திருத்தம் மேலும், இலங்கைக் குடியரசில் இறையாண்மை மக்களிடமே உள்ளதுடன் அதனை பிரிக்க முடியாது என்ற அரசியலமைப்பின் 3ஆவது உறுப்புரையே இதன் அடிப்படையாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆகிய உறுப்புரைகள் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.  நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்யும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிப்பதுடன் அரசியலமைப்பின் 3ஆவது உறுப்புரையை மீறும் செயலாகும் என்றும், இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு கட்டாயம் தேவை என்றும் 2022ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளனர். சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சிவில் சமூகத்தினருடன் எவ்வித கலந்துரையாடல்களும் இன்றி, வெளிப்படைத்தன்மையற்ற முறையில் இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்படுவது குறித்துக் கவலை வெளியிட்டுள்ள அவர்கள், நீதித்துறை சார்ந்த இந்த விடயத்தில் சார்புத்தன்மை அல்லது பாரபட்சம் ஏற்படுவதைத் தவிர்க்க சர்வதேச நீதித்துறை தரநிலைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே, மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்கும் ஒரே சட்டப்பூர்வமான வழிமுறையாகச் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியினர், அரசியலமைப்பின் 85(1) உறுப்புரைக்கு அமைவாக இந்தச் சட்டமூலத்தைச் சர்வஜன வாக்கெடுப்பிற்குச் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சரவை ஊடாக எடுக்குமாறு ஜனாதிபதியைக் கோரியுள்ளனர்.