(நெவில் அன்தனி) அன்டிகுவா நோர்த் சவுண்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மிகவும் பலமான நிலையில் இருக்கிறது. அமிர் ஜங்கூ, அணித் தலைவர் ரொஸ்டன் சேஸ் ஆகிய இருவரும் அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் சாத…
(நெவில் அன்தனி) அன்டிகுவா நோர்த் சவுண்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மிகவும் பலமான நிலையில் இருக்கிறது. அமிர் ஜங்கூ, அணித் தலைவர் ரொஸ்டன் சேஸ் ஆகிய இருவரும் அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 410 ஓட்டங்களைப் பகிர்ந்ததன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 626 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை தனது இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 308 ஓட்டங்களைப் பெற்றது இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீள்வதற்கு இலங்கை மேலும் 303 ஓட்டங்களைப் பெற வேண்டும். அமிர் ஜங்கூ, ரொஸ்டன் சேஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 410 ஓட்டங்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 6ஆவது விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டமாகும். தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அமிர் ஜங்கூ மிகவும் அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி 19 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 233 ஓட்டங்களைக் குவித்தார். இந்தப் போட்டியில் அவர் தனது கன்னிச் சதத்தைப் பூர்த்திசெய்து அதனை இரட்டைச் சதமாக பரிணமிக்கச் செய்தார்.
தனது 58ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரொஸ்டன் சேஸ் 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 194 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மிலன் ரத்நாயக்க 124 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சொனால் தினூஷ 234 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பொட்டியின் இரண்டாம் நாள் காலை முதலாவது ஓவரை வீசிய வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார உபாதைக்குள்ளானதால் தொடர்ந்து விளையாடவில்லை. அவருக்கு ஸ்கான் பரிசோதனை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்தது.

