ஜப்பான் வெளியிட்ட புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில் (Defence White Paper) சீனாவை அச்சுறுத்தலாகச் சித்தரித்துள்ளதாகவும் தாய்வான் விவகாரம் தொடர்பாகத் தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகவும் கூறி, ஜப்பானிய அரசாங்கத்திடம் சீனா உத்தியோகபூர்வமாகத் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளத…
ஜப்பான் வெளியிட்ட புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில் (Defence White Paper) சீனாவை அச்சுறுத்தலாகச் சித்தரித்துள்ளதாகவும் தாய்வான் விவகாரம் தொடர்பாகத் தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகவும் கூறி, ஜப்பானிய அரசாங்கத்திடம் சீனா உத்தியோகபூர்வமாகத் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளது.
ஜப்பான் ஆண்டுதோறும் வெளியிடும் இந்தப் பாதுகாப்பு அறிக்கையில், தாய்வானைச் சுற்றி சீனா தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், இதனால் இரு தரப்பிற்கும் இடையிலான இராணுவச் சமநிலை சீனாவுக்குச் சாதகமாக விரைவாக மாறிவருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.சீனா கடும் எதிர்ப்பு இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சு, தாய்வான் விவகாரம் சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், அதில் தலையிட ஜப்பானுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, ஆயுத உற்பத்தியின் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கில் தனது இராணுவ பலத்தை அதிகரித்து வருகின்றது.
எனினும், ஜப்பான் தனது வரலாற்றுப் பிழைகளிலிருந்து பாடங்கற்காமல் மீண்டும் இராணுவமயமாக்கலை நோக்கிச் செல்வதாகச் சீனா குற்றம் சாட்டியுள்ளதுடன், ஜப்பானின் இந்த நகர்வுகளைக் கட்டுப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.












