காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்து "உலகளாவிய முயற்சி" எடுக்க வேண்டும் என்று நேபாள வெளியுறவு அமைச்சர் சிசிர் கனால் அழைப்பு விடுத்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பச்சைவீட்டு வாய…

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்து "உலகளாவிய முயற்சி" எடுக்க வேண்டும் என்று நேபாள வெளியுறவு அமைச்சர் சிசிர் கனால் அழைப்பு விடுத்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பச்சைவீட்டு வாயு உமிழ்வில் மிகக் குறைந்த பங்களிப்பையே நேபாளம் வழங்கும் போதிலும், புவி வெப்பமயமாதலால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்வதாகச் சுட்டிக்காட்டினார்.அரசாங்கம் அப்பகுதியில் ஏற்படும் பனிச்சரிவுகள் குறித்து ஆராய மேலதிக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், இமயமலையில் ஏற்படும் மாற்றங்களை நன்கு புரிந்துகொள்ள சீன ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து "கூட்டு பொறிமுறை" ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவித்தார். "நேபாளமும் அதன் குடிமக்களும் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றாகக் காலநிலை மாற்றத்தைக் கருதி, உலகம் முழுவதும் இதற்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்றும், "இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் ஒன்றாக முன்வர வேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதேவேளை, அண்மையில் நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்குக் காரணமாக அமைந்த பனிப்பாறை சரிவில் காலநிலை மாற்றத்தின் பங்கு எந்தளவுக்கு இருந்தது என்பது இனிவரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் விரிவான ஆய்வுகள் மூலமே தெரியவரும். எனினும், புவி வெப்பமயமாதல் காரணமாக இமயமலையின் பனிப்பாறைகள், பனிப்பகுதிகள் மற்றும் உறைபனிகள் மிக வேகமாக உருகி வருகின்றன என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். பனிப்பாறைகள் குறுகி பின்வாங்குவது அவை சரிந்து விழுவதற்கு மட்டுமின்றி, பனி ஏரிகளை வேகமாக நிரப்பி அவை உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் காரணமாகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கட்டிடங்களை சிமெந்து பிணைத்து வைப்பது போல, பனியும் உறைபனியுமே மலைச்சரிவுகளைத் தாங்கிப் பிடிக்கின்றன. அவை வேகமாக உருகும்போது மலைகளின் நிலைத்தன்மை குறைந்து, பாறைச் சரிவுகள், நிலச்சரிவுகள், பனிச்சரிவுகள் மற்றும் இடிபாடுகள் நிறைந்த வெள்ளப்பெருக்குகள் அதிகளவில் ஏற்படுகின்றன. புவி வெப்பமயமாதல் காரணமாக மலைகளின் மிக உயரமான பகுதிகளில் பனிப்பொழிவுக்குப் பதிலாக மழை பொழிவதாகவும், இது மலைச்சரிவுகளின் நிலைத்தன்மையை மேலும் சீர்குலைப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டிற்கான சர்வதேச மையம்  வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்பகுதியில் பனி இழப்பு வீதம் இரட்டிப்பாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.