"வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்” காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நேற்று (25.08.2026) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதன் போது கருத்து தெரிவித்த நீதி மற்றும்…

"வலிந்து  காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்” காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நேற்று (25.08.2026) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதன் போது கருத்து தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார அவர்கள், இன்று நாம் இங்கு ஒன்று கூடியிருப்பது ஒரு சாதாரண நிகழ்வை நடத்துவதற்காக அல்ல. ஏனெனில் பல ஆண்டுகளாகத் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாமல், அவர்களின் வருகைக்காகக் காத்திருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் துயரத்தையும் வேதனையையும் நினைவுகூர்வதற்காகவும், அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான எமது உறுதியை வெளிப்படுத்துவதற்காகவுமே இந்த நிகழ்வு இடம்பெறுகிறது எனத் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் பின்னால் ஒரு குடும்பத்தின் ஆழமான துயரம் உள்ளது. ஒரு தாய் தனது பிள்ளை திரும்பி வருவான் எனக் காத்திருக்கிறார். ஒரு மனைவி தனது கணவன் வருவார் என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறார். இவ்வாறு பல ஆண்டுகளாக பதிலற்ற கேள்விகளுடனும் முடிவில்லாத எதிர்பார்ப்புடனும் வாழும் குடும்பங்களின் வேதனையை அரசாங்கம் நன்கு புரிந்துகொண்டுள்ளதுடன் அவர்களது கவலையிலும் எதிர்பார்ப்பிலும் பங்காளியாக இருக்கிறது எனத் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினை வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மட்டும் உரித்தானதல்ல. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான சம்பவங்களால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவது முழு நாட்டினதும் பொறுப்பாகும்.“சட்டம் அனைவருக்கும் சமம் சட்டத்திற்கு மேலாக எவரும் இல்லை” என்பதே அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். அந்த வகையில், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் நீதியானதும் முறையானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இதன் ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு, குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலங்களில் நிதி மற்றும் ஆளணி பற்றாக்குறை காரணமாகத் தாமதமடைந்த விசாரணைகளை விரைவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக தேவையான நிதி மற்றும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சுமார் 69 புதிய பணியாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த விசாரணைகளையும் விரைவுபடுத்துவதற்காக கணிசமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினை வெறுமனே விசாரணைகளுடன் முடிவடையக் கூடாது. அவர்களின் வாழ்வாதாரம், வீடமைப்பு, தொழிற்பயிற்சி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட தேவைகளையும் கவனத்தில் கொண்டு, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் நிலையான பாதையில் கொண்டு செல்வதற்கான ஒருங்கிணைந்த உதவித் திட்டத்தை உருவாக்குவது தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இதுவரை 2,400க்கும் மேற்பட்டோருக்கு புனர்வாழ்வுக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் மேலும் தெரிவித்தார். அதேபோன்று, புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளும் அரசியல் நோக்கங்களின்றி, அறிவியல் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும். உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆதாரபூர்வமாகக் கண்டறிவதே எமது நோக்கமாகும். குறிப்பாக, செம்மணி புதைகுழி விசாரணைகளுக்காக இதுவரை சுமார் 57 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உண்மையை கண்டறியும் நடவடிக்கைகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக ஒருபோதும் இடைநிறுத்தப்படக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது. பல தசாப்தங்களாகப் பதிலுக்காகக் காத்திருக்கும் குடும்பங்களின் கேள்விகளை நாம் புறக்கணிக்க முடியாது. அவர்களின் குரலுக்குச் செவிசாய்த்து, உண்மையை கண்டறிந்து, அவர்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்குவது எமது கடமையும் பொறுப்புமாகும் எனத் தெரிவித்தார். அதேவேளை, கடந்த காலத்தில் இடம்பெற்ற துயரமான சம்பவங்களை நினைவுகூர்வதுடன் மட்டும் நின்றுவிடாமல், இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்பாகும். இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் வாழும் மக்களையும் புறக்கணிக்காமல், அனைவருக்கும் சமமான நீதி, பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நல்ல வாழ்க்கையை உறுதிப்படுத்துவதுடன் அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பு. நாட்டு மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியதும் இந்த எதிர்பார்ப்பிலாகும் எனத் தெரிவித்தார். அந்த மக்கள் ஆணையைப் பொறுப்புடனும் பொறுப்புக்கூறலுடனும் நிறைவேற்றுவோம்.கடந்த காலத்தின் வேதனைகள் எதிர்காலத்தின் சமாதானத்திற்கான அடித்தளமாக அமைய வேண்டும். உண்மையை கண்டறிந்து, நீதியை நிலைநாட்டி, பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, தேசிய நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் வலுவான அடித்தளத்தை அமைப்பதே எமது உறுதிப்பாடாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.