கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான சர்ச்சை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் முன்வைத்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்…
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான சர்ச்சை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் முன்வைத்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கல்முனை வைத்தியசாலை விவகாரத்தை இன அல்லது மத மோதலாக மாற்றாமல், மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடனும் முதிர்ச்சியுடனும் அணுக வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
பல இன, மத மற்றும் மொழி சமூகங்கள் வாழும் இலங்கையில் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித்துவமான கலாசார மற்றும் மத நடைமுறைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை அரச சேவையின் ஒழுங்குமுறைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையில் ஊழியர்களுக்கான சீருடைகள் நோயாளிகள் மற்றும் பொதுமக்களால் ஊழியர்களை இலகுவாக அடையாளம் காண்பதற்கும், சுகாதார மற்றும் பாதுகாப்புத் தேவைகளை உறுதி செய்வதற்கும் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நடைமுறையில் உள்ள சீருடை தொடர்பான விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டுமாயின், அதற்கான முறையான முன்மொழிவு சுகாதார அமைச்சின் சீருடைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு உரிய கலந்துரையாடல்களின் பின்னர் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையை மேலும் தீவிரமடைய விடாமல் தடுப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் சில ஊழியர்களை தற்காலிகமாக இடமாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, முஸ்லிம் பெண்கள் சுகாதாரத் துறையில் இணைவதில் அதிக ஆர்வம் காட்டுவது வரவேற்கத்தக்க விடயம் என தெரிவித்த அமைச்சர், மத மற்றும் கலாசார காரணங்களால் ஒருவர் அரச சேவையில் இணைவதற்கான வாய்ப்பு கட்டுப்படுத்தப்படுவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த அனைவரும் சுகாதாரத் துறையில் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை உறுதி செய்வதுடன், அவர்களின் மத மற்றும் கலாசார உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் தேவையான சீர்திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாட அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு வைத்தியசாலையின் சீருடை விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சு உடனடி தீர்வொன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நீண்டகாலத் தீர்வொன்றை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.












