அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று மறைமுகப் பேச்சுக்கள் கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்குப் பின்னர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் 17 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அ…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று மறைமுகப் பேச்சுக்கள் கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்குப் பின்னர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் 17 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமுல்படுத்துவது குறித்து, கட்டார் தலைநகரான டோஹாவில் இருதரப்பினரும் மறைமுகப் பேச்சுக்களை நேற்று முன்தினம் மேற்கொண்டனர்.
இந்தப் பேச்சுக்கள் மூலம் ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறப்பது, முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், இந்தப் பேச்சுக்களுக்கு கட்டார் மற்றும் பாகிஸ்தான் அரசுகள் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகின்றன.
இதையடுத்து, கட்டார் மற்றும் பாகிஸ்தானிய மத்தியஸ்தர்கள் தனித்தனியாக அமெரிக்கா மற்றும் ஈரான் உடன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களை நேர்மறையான முன்னேற்றங்களுடன் நிறைவு செய்துள்ளதாக, பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரானிய பிரதிநிதிகள் இடையேயான அடுத்த சுற்று மறைமுகப் பேச்சு கொல்லப்பட்ட ஈரானிய முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்குப் பிறகு நடைபெறும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது உடல் ஜூலை 9 ஆம் திகதி மஷாத் நகரத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. (a)

