பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன், தனது 'மிமி' (Mimi) திரைப்படத்திற்காக உடல் எடையை அதிகரிக்க வேண்டியிருந்தது. அந்த இரண்டு மாத இடைவெளியைப் பயன்படுத்தி, தனது கருமுட்டைகளை உறைநிலையில் (Egg Freezing) சேமித்து வைத்ததாக அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இந்தச் சிகிச்சையின் போது ஏற்ப…

பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன், தனது 'மிமி' (Mimi) திரைப்படத்திற்காக உடல் எடையை அதிகரிக்க வேண்டியிருந்தது. அந்த இரண்டு மாத இடைவெளியைப் பயன்படுத்தி, தனது கருமுட்டைகளை உறைநிலையில் (Egg Freezing) சேமித்து வைத்ததாக அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இந்தச் சிகிச்சையின் போது ஏற்படும் உடல் வீக்கம், படத்திற்கு உதவியாக இருக்கும் என்பதால், மிகவும் திட்டமிட்டு இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார். தனது தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்தும் அதே வேளையில், எதிர்காலக் குடும்பக் கட்டுப்பாடு குறித்த தேவையற்ற பதற்றமோ அல்லது அழுத்தமோ இருக்கக்கூடாது என்பதற்காக, நண்பரின் ஆலோசனையின் பேரில் தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட சிறந்த பரிசாக இதைக் கருதுவதாக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் கீர்த்தி சனோனைப் போல, பிரியங்கா சோப்ரா மற்றும் நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா உள்ளிட்ட பல பெண் பிரபலங்கள் ஏற்கனவே தங்கள் கருமுட்டைகளைச் சேமித்து வைத்துள்ளனர். பிரியங்கா சோப்ரா தனது 30-களின் தொடக்கத்திலும், உபாசனா தனது 29 வயதிலும் இந்த முடிவை எடுத்து, தற்போது தங்களின் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களைத் தவிர ஏக்தா கபூர், மோனா சிங், அகான்ஷா ரஞ்சன் கபூர் போன்ற பல பிரபலங்களும், தங்கள் தொழில் வாழ்க்கையையும் எதிர்காலத் தாய்மையையும் சமநிலைப்படுத்த இந்த நவீன மருத்துவ முறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

கேட்பதற்கு எளிமையாகத் தெரிந்தாலும், இந்தக் கருமுட்டைச் சேமிப்புச் சிகிச்சைக்கான செலவு மிகவும் அதிகம். இந்தியாவில் இச்சிகிச்சையைத் தொடங்கி, ஹார்மோன் பரிசோதனைகள், மருந்துகள், முட்டைகளைச் சேகரித்து உறைநிலையில் வைப்பது மற்றும் அதற்கான வருடாந்திர பராமரிப்புச் சந்தா என அனைத்துக்கும் சேர்த்து, வருடத்திற்குச் சுமார் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை செலவாகிறது. இந்த அதீத மருத்துவச் செலவு காரணமாக, நவீன தொழில்நுட்பத்தின் இந்த வசதி, நடுத்தர மற்றும் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.