நாட்டின் திறந்த சந்தைகளில் கருவாடுகளின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். தற்போது ஒரு கிலோ கருவாட்டின் சில்லறை விலை பல இடங்களில் 3,000 ரூபாயைத் தாண்டியுள்ளதுடன், சில வகை உயர்தர கருவாடுகள் 4,000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக த…
நாட்டின் திறந்த சந்தைகளில் கருவாடுகளின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஒரு கிலோ கருவாட்டின் சில்லறை விலை பல இடங்களில் 3,000 ரூபாயைத் தாண்டியுள்ளதுடன், சில வகை உயர்தர கருவாடுகள் 4,000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
குறிப்பாக தோரா, சுறா, கீளான், பலயா மற்றும் இறால் கருவாடுகளின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலர் நெத்தலி ஒரு கிலோவின் விலையும் சுமார் 2,000 ரூபாயை அண்மித்துள்ளது.
சந்தை நிலவரங்களின் அடிப்படையில், ஒரு கிலோ தோரா கருவாடு 3,200 முதல் 4,000 ரூபாய் வரையிலும், சுறா கருவாடு 2,500 முதல் 3,200 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டமை, கடல்சார் காலநிலை மாற்றங்கள் மற்றும் எரிபொருள் செலவுகள் அதிகரித்தமை உள்ளிட்ட காரணங்களால் புதிய மீன்களின் விலைகளும் உயர்ந்துள்ளதாகவும், அதன் தாக்கமே கருவாடு சந்தையிலும் பிரதிபலித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய, கீளான் கருவாடு ஒரு கிலோ சுமார் 2,900 ரூபாய்க்கும், மடு மீன் 2,000 ரூபாய்க்கும், பலயா 1,900 ரூபாய்க்கும், இறால் 2,000 ரூபாய்க்கும், அங்கூளு 1,950 ரூபாய்க்கும், நெத்தலி 1,700 ரூபாய்க்கும், உம்புலக்கடை 2,600 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
கருவாடு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.












