(நெவில் அன்தனி) மூன்று நாடுகளில் கூட்டாக நடத்தப்பட்டுவரும் 23ஆவது பீபா உலகக் கிண்ண கால்பந்தாட இறுதிச் சுற்றில் முதலாம் சுற்றுப் போட்டிகள் யாவும் நேற்றுடன் நிறைவுபெற்றன. முதலாம் சுற்றின் கடைசிப் போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, முன்னாள் சம்பியன் இங்கிலாந்து, குரோஷியா, கொங்…
(நெவில் அன்தனி) மூன்று நாடுகளில் கூட்டாக நடத்தப்பட்டுவரும் 23ஆவது பீபா உலகக் கிண்ண கால்பந்தாட இறுதிச் சுற்றில் முதலாம் சுற்றுப் போட்டிகள் யாவும் நேற்றுடன் நிறைவுபெற்றன. முதலாம் சுற்றின் கடைசிப் போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, முன்னாள் சம்பியன் இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ ஆகிய அணிகள் வெற்றிபெற்றன. அதேவேளை, கொலம்பியா - போர்த்துக்கல் போட்டியும் அல்ஜீரியா - ஆஸ்திரியா போட்டியும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன. இப் போட்டி முடிவுகளின் பிரகாரம் ஜே குழுவிலிருந்து ஆர்ஜன்டீனா, ஆஸ்திரியா, அல்ஜீரியா ஆகியனவும் கே குழுவிலிருந்து கொலம்பியா, போர்த்துக்கல், கொங்கோ ஆகியனவும் எல் குழுவிலிருந்து இங்கிலாந்து, குரோஷியா, கானா ஆகியனவும் 32 அணிகள் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளன. மெஸ்ஸியின் கோல் குவிப்பு தொடர்கிறது டலாஸ் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஜோர்தானுக்கு எதிரான ஜே குழு போட்டியில் மாற்று வீரராக 60ஆவது நிமிடத்தில் களம் புகுந்த லியோனல் மெஸ்ஸி 80ஆவது நிமிடத்தில் ப்றீ கிக் மூலம் அலாதியான கோல் போட, ஆர்ஜன்டீனா 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஜோர்தானுக்கு எதிரான கடைசிப் போட்டிக்கு முன்னரே ஆர்ஜன்டீனா 32 அணிகள் சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்ததால், பயிற்றுநர் லயனல் ஸ்கொலாரி அணியில் 9 மாற்றங்களை செய்திருந்தார். மெஸ்ஸிக்கு சற்று ஓய்வு கொடுக்கும் வகையில் அவரை மாற்று வீரர்கள் பட்டியில் ஸ்கொலாரி இணைத்துக்கொண்டிருந்தார்.
போட்டியின் 19ஆவது நிமிடத்தில் லோ செல்சோ முதலாவது கோலை போட்டு ஆர்ஜன்டீனாவை முன்னிலையில் இட்டார். போட்டியின் 31ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனல்டியை லௌத்தாரோ மாட்டினெஸ் கோலாக்க இடைவேளையின்போது ஆர்ஜன்டீனா 2 - 0 என முன்னிலையில் இருந்தது. இடைவேளைக்குப் பினனர் ஜோர்தான் சாரபாக முஸா அல்தாமரி கோல் ஒன்றைப் போட்டு ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், ஆர்ஜன்டீனாவின் பலத்துக்கு ஜோர்தானினால் ஈடுகொடுக்க முடியாமல் போக ஆர்ஜன்டீனா 3 - 1 என வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் ஒரு கோல் போட்ட மெஸ்ஸி, தனது உலகக் கிண்ண கோல் எண்ணிக்கையை 19ஆக உயர்த்திக்கொண்டுள்ளார். அல்ஜீரியா 3 - ஆஸ்திரியா 3 அல்ஜீரியாவுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையில் கன்சாஸ் சிட்டி விளையாட்டரங்கில் நடைபெற்ற இதே குழுவுக்கான மற்றைய போட்டி 3 - 3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
இடைவேளையின்போது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலை போட்டிருந்தன. ஆஸ்திரியா சார்பாக மரியோ அர்னோடோவிக் (28 நி.), மார்செல் சபிட்ஸர் (55 நி.), சசா கலாஜ்ஸிக் (90+6 நி.) ஆகியோரும் அல்ஜீரியா சார்பாக ரபிக் பெல்காலி (45 நி.), ரியாத் மாஹ்ரெஸ் (60 நி., 90+3 நி.) ஆகியோரும் கோல்களைப் போட்டனர். ரொனால்டோவின் போர்த்துகலுக்கு ஏமாற்றம் கொலம்பியாவுக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில் நடைபெற்ற கே குழு போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் கோல் போடுவதற்கு மொத்தமாக 36 முயற்சிகளை எடுத்துக்கொண்டன. ஆனால் ஒரு முயற்சியும் கோலாக மாறவில்லை.
மேலும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கொலம்பிய வீரர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் அவரால் சாதிக்க முடியாமல் போனது. இந்தப் போட்டி வெற்றிதோல்வின்றி முடிவடைந்த போதிலும் இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டன. பின்னிலையிலிருந்து மீண்டுவந்து வெற்றியீட்டிய கொங்கோ அட்லான்டா விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றொரு கே குழு போட்டியில் உலகக் கிண்ண அறிமுக அணி உஸ்பெகிஸ்தானிடம் ஆரம்பத்தில் பெரும் சவாலை எதிர்கொண்ட கொங்கே, இடைவேளைக்குப் பின்னர் எதிர்நீச்சல் போட்டு 3 - 1 என வெற்றிபெற்றது. போட்டியின் 10ஆவது நிமிடத்தில் எல்டோ ஷொமுரோதோவ் கோல் போட்டு உஸ்பெகிஸ்தானை முன்னிலையில் இட்டார்.
தொடர்ந்து 67ஆவது நிமிடம் வரை உஸ்பெகிஸ்தான் முன்னிலையில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் எதிர்நீச்சல் போட்டு விளையாடிய கொங்கோ, 32 நிமிட இடைவெளியில் 3 கோலைகளைப் போட்டு வெற்றியீட்டியது. யோவான் விஸ்ஸா (68 நி., 90 + 1 நி.), ஃபிஸ்டன் மேயேல் (78 நி.), ஆகியோர் கோல்களைப் போட்டு கொங்கோவை வெற்றி அடையச் செய்தனர். இடைவேளைக்குப் பின்னர் அசத்திய இங்கிலாந்து பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் தனது இரண்டாவது அத்தியாத்தில் விளையாடும் பணாமா, நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் முன்னாள் சம்பியன் இங்கிலாந்துக்கு பலத்த சவாலாக விளங்கி தோல்வி அடைந்தது.
இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இந்தப் போட்டியின் முதலாவது பகுதியில் கோல் எதுவும் போடப்படவில்லை. இடைவேளைக்குப் பின்னர் 60ஆவது நிமிடத்திலிருந்து சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்திய இங்கிலாந்து 5 நிமிட இடைவெளியில் இரண்டு கோல்களைப் போட்டு 2 - 0 என வெற்றியீட்டியது. ஜூட் பெலிங்ஹாம் 62ஆவது நிமிடத்திலும் ஹெரி கேன் 67ஆவது நிமிடத்திலும் கோல்களைப் புகுத்தினர். இறுக்கமான போட்டியில் குரோஷியா வெற்றி குரோஷியாவுக்கும் கானாவுக்கும் இடையில் பிலடெல்பியா விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றொரு கே குழு போட்டியில் குரோஷியா 2 - 1 என இறுக்கமான வெற்றியை ஈட்டியது. ஆட்டத்தின் முதலாவது பகுதியில் பீட்டர சுசிக் 31ஆவது நிமிடத்தில் போட்ட கோலின் மூலம் குரோஷியா முன்னிலை அடைந்தது. அதன் பின்னர் நெடு நேரத்திற்கு இரண்டு அணிகளாலும் கோல் போட முடியவில்லை. கானா சார்பாக 73ஆவது நிமிடத்தில் டெரிக் லூக்காசென் கோல் நிலையை சமப்படுத்தினார். ஆனால் அடுத்த பத்தாவது நிமிடத்தில் நிக்கோலா விலாசிக் போட்ட கோல் குரோஷியாவின் வெற்றி கோலாக அமைந்தது.

