கடவுச்சொல் (Password) உள்ளிட்ட வழக்கமான முறைகள் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியாத சூழ்நிலைகளில், பயனர்கள் தங்களது அடையாளத்தை முக அடையாள தொழில்நுட்பம் (Facial Biometrics) மூலம் உறுதிப்படுத்தும் புதிய 'செல்ஃபி காணொளி' (Selfie Video Verification) வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளதா…

கடவுச்சொல் (Password) உள்ளிட்ட வழக்கமான முறைகள் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியாத சூழ்நிலைகளில், பயனர்கள் தங்களது அடையாளத்தை முக அடையாள தொழில்நுட்பம் (Facial Biometrics) மூலம் உறுதிப்படுத்தும் புதிய 'செல்ஃபி காணொளி' (Selfie Video Verification) வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலி காணொளிகள் (Deepfakes) மற்றும் ஆள்மாறாட்ட மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், கணக்குகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய மீட்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.Selfie Video Verification இந்த வசதியின் கீழ், பயனர்கள் தங்களது கைப்பேசியின் கெமராவைப் பயன்படுத்தி ஒரு குறுகிய செல்ஃபி காணொளியை பதிவு செய்ய வேண்டும்.பதிவின் போது, பல்வேறு கோணங்களில் முகத்தை பதிவு செய்யும் வகையில், தலையை குறிப்பிட்ட திசைகளில் அசைக்குமாறு திரையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

எதிர்காலத்தில் கணக்கை அணுக முடியாத நிலை ஏற்பட்டால், பயனர் மீண்டும் ஒரு புதிய செல்ஃபி காணொளியை பதிவு செய்ய வேண்டும். பின்னர், முன்பே பதிவு செய்யப்பட்ட காணொளியுடன் அதை ஒப்பிட்டு சரிபார்த்த பின்னரே கணக்கை மீண்டும் இயக்க அனுமதி வழங்கப்படும்.

இந்த செயல்முறையில் நேரலை சரிபார்ப்பு (Liveness Detection) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், புகைப்படங்கள் அல்லது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலி காணொளிகள் மூலம் கணக்கை சட்டவிரோதமாக மீட்டெடுப்பது சாத்தியமற்றதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது

மேலும், பயனர்களின் வெளிப்படையான அனுமதியுடன் மட்டுமே இந்த காணொளிகள் சேமிக்கப்படும். அவை அனைத்தும் என்க்ரிப்ட் (Encrypted) செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுவதுடன், பயனர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் தங்களது கூகுள் கணக்கிலிருந்து அவற்றை நீக்கிக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதி, தற்போது பயன்பாட்டில் உள்ள பாஸ்கீ (Passkeys) மற்றும் இரு-அடுக்கு அங்கீகாரம் (Two-Factor Authentication – 2FA) போன்ற பாதுகாப்பு முறைகளுக்கு மாற்றாக அல்ல என்றும், கைப்பேசி தொலைந்து போதல் அல்லது பழுதடைவது போன்ற அவசர சூழ்நிலைகளில் கணக்கை பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்கான கூடுதல் பாதுகாப்பு அம்சமாகவே செயல்படும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.