விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில், கத்தோலிக்கச் சபையுடனான கலந்துரையாடல் வியாழக்கிழமை (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட கத்த…
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில், கத்தோலிக்கச் சபையுடனான கலந்துரையாடல் வியாழக்கிழமை (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்கப் பாடசாலைகளின் நிர்வாகச் சிக்கல்கள், கத்தோலிக்க மதத்திற்கான ஆசிரியர்களை நியமிப்பதற்கான பொறிமுறையைத் தயாரித்தல் மற்றும் ஆசிரியர் தொழிலுக்காகக் கத்தோலிக்கக் கன்னியாஸ்திரிகளையும் அருட்தந்தையர்களையும் உள்வாங்குவது குறித்த தற்போதைய முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல் என்பன இதன்போது முக்கியமாக ஆராயப்பட்டன.
மேலும், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பாகக் கல்வி அமைச்சின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் முறைமை பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
ஆண்டுக்கு மூன்று தடவைகள் கத்தோலிக்கச் சபையுடன் இவ்வாறான கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்குத் தமது நன்றியைத் தெரிவிப்பதாகக் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார். அத்துடன், எக்ஸ்பிரஸ் பேர்ள் (Exxon Pearl) கப்பல் விபத்தினால் நாட்டின் சமுத்திர எல்லைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி மேலும் ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
எந்தவித பேதமுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் தங்களது மதத்தைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதே தமது முக்கிய அபிலாஷை என்றும், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைகளைச் சீரமைக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இச்சந்திப்பில் கத்தோலிக்கச் சபையின் சார்பில் அருட்தந்தை ஹெரால்ட் ஆண்டனி பெரேரா, அருட்தந்தை விமல் சிறி ஜயசூரிய, அருட்தந்தை மெக்ஸ்வெல் சில்வா உள்ளிட்ட பலரும், அரசாியத்தின் தரப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கத்தோலிக்கச் சபையின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் டப்ளியூ. ஏ. நீலிகா பெரேரா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.












