கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் பயணிகள் முனையத்தின் கொள்ளளவை விரிவுபடுத்தும் தொடர்பான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. M/s Maga Engineering (Pvt) Ltd நிறுவனத்திற்கு இந்த திட்டத்தினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. துறைமுக மற்றும் சிவில் விமான…
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் பயணிகள் முனையத்தின் கொள்ளளவை விரிவுபடுத்தும் தொடர்பான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
M/s Maga Engineering (Pvt) Ltd நிறுவனத்திற்கு இந்த திட்டத்தினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உட்கட்டமைப்பு வசதிவிமான நிலைய வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பயணிகளின் கொள்ளளவை அதிகரிப்பது மற்றும் வசதிகளை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புதிய கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட உள்ளது. அத்துடன், அதில் பயணிகளைப் பரிசோதிப்பதற்கான 36 புதிய கவுண்டர்களை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் முனையத்திலிருந்து நேரடியாக விமானங்களுக்கு செல்வதற்கான 06 புதிய நுழைவாயில்களும் இதன் கீழ் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முழுத் திட்டத்தின் கொள்முதல் செயல்முறையை முன்னெடுப்பதற்கு, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 09ஆம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆரம்ப அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதற்கான பொருத்தமான ஒப்பந்ததாரரைத் தெரிவு செய்வதற்காக சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த கொள்முதல் முறைகளுக்கு அமைய ஏலங்கள் கோரப்பட்டிருந்தன.
இதில் 03 ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அந்த ஏலங்களை முறைப்படி மதிப்பீடு செய்த பின்னர், உயர் மட்ட நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மிகவும் பொருத்தமான குறைந்த ஏலதாரராக Maga Engineering நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, பெறுமதி சேர் வரி தவிர்த்து 7.26 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 3.77 பில்லியன் ரூபாய் செலவில் இந்த ஒப்பந்தத்தை குறித்த நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

