நாட்டை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கைப்பற்றியிருந்தாலும், கிழக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் சாதாரண மக்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்து வருவதாக மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீ. தியாகராஜா குற்றம் சாட்டியுள்ளார். லங்காசிறி ஊடகம் வழங்கு…

நாட்டை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கைப்பற்றியிருந்தாலும், கிழக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் சாதாரண மக்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்து வருவதாக மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீ. தியாகராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின்போது கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகப் பணியாற்றிய அனுராதா ஜகம்பத், இன்றும் அதிகாரத்தில் இருப்பது போன்று செயற்படுகின்றார். அநுர அரசாங்கம் வழங்கும் திட்டங்கள் விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் கிடைக்காமல் இருப்பதற்கு இவரும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகின்றார்.

மக்களின் நலனிற்காக வரும் அதிகாரிகளை, அவருடைய ஆதரவாளர்களை வைத்து தாக்கி வெளியில் அனுப்புகிறார்.

இதுபோன்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும்பொழுது, என்னதான் நல்லாட்சியை இலங்கை மக்களுக்கு வழங்க வேண்டும் என அநுர நினைத்தாலும், ஒரு சில இடங்களில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி தொடர்வதாகத் தெரிகின்றது.

எது எப்படி இருந்தாலும், பண்ணையாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், மாடுகளுடன் வீதிக்கு இறங்கி போராடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பது தொடர்பிலும் “ஊடறுப்பு” நிகழ்ச்சி ஆழமாக ஆராய்கிறது,