உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் CID பல விசேடமான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.ஆனால் சில முக்கிய தகவல்கள் கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் சுரேஷ் சலே தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அத்தோடு, இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மற்றும் அதனுடன் தொட…

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் CID பல விசேடமான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.ஆனால் சில முக்கிய தகவல்கள் கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் சுரேஷ் சலே தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அத்தோடு, இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மற்றும் அதனுடன் தொடர்புடைய மேலும் ஏழு பேர் மிகவும் இரகசியமான வாக்குமூலங்களை CID யிடம் வழங்கியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு சுரேஷ் சலே நேரடியாகவே தொடர்புடையவர் என்று அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர். ஏழு பேரின் இரகசிய வாக்குமூலம்அதாவது சுரேஷ் சலேயைச் சுற்றி இருந்த அவரது தீவிர ஆதரவாளர்களான ஏழு பேர் தான் இந்தச் சாட்சியங்களை வழங்கியுள்ளனர். அதற்கு மேலதிகமாக, இந்த ஏழு சாட்சிகளும் கொழும்பு கோட்டை நீதவானிடம் தனிப்பட்ட முறையில், இரகசியமாக வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கு ஆரம்பக் கட்டத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அப்போது கோட்டை நீதவானாகச் செயல்பட்டவர் தான் இசுரு நெத்திகுமார. அப்போது அவர் முன்னிலையில்தான்,ஏழு பேரும் மிகவும் இரகசியமான வாக்கு மூலங்களை வழங்கியுள்ளனர். பொதுவாக, ஒரு நீதவான் முன்னிலையில் இவ்வாறானதொரு வாக்குமூலம் மிகவும் இரகசியமாகவே வழங்கப்படும். அவ்வாறான வாக்குமூலங்கள் பகிரங்க நீதிமன்றத்தில் பெறப்படுவதில்லை. நீதவானின் உத்தியோகபூர்வ அறையினுள் (Chamber) மிகவும் இரகசியமாகவே பெறப்படும். அப்பொழுது, அந்த இரகசிய வாக்குமூலத்தை வழங்கும்போது அங்கு நீதவான், நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் மற்றும் தட்டச்சாளர் ஆகிய மூவர் மட்டும்தான் சம்பந்தப்படுவார்கள். அதற்கு மேலதிகமாக, இரகசிய வாக்குமூலத்தை வழங்கும் நபர்கள் மட்டும்தான் சம்பந்தப்படுவார்கள். அந்த ஏழு நபர்களும் கூட தனித்தனியாகத்தான் அழைக்கப்படுவார்கள், ஒன்றாக அல்ல.  பார்க்க முடியாக வாக்குமூலம்அவ்வாறு வாக்குமூலங்கள் பெறப்பட்ட பிறகு, அதனை எதிர்த்தரப்போ அல்லது வழக்காளித்தரப்போ எந்தவொரு தரப்பினரும் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. அதன் பிறகு நீதவான் அந்த வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர் அதை தனித்தனியாக முத்திரையிட்டு (Seal) அவற்றை நீதவானின் தனிப்பட்ட பாதுகாப்புப் பெட்டகத்தில் (Safe) வைப்பார். அதை எந்தவொரு நபரும் பெற்றுக்கொள்ள முடியாது. அதனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏதேனும் ஒரு சட்டப் பிரச்சினை ஏற்படும்போது, அந்த வழக்குடன் தொடர்புடைய சட்டரீதியான ஒரு தீர்மானமிக்க கட்டத்தில்தான் கிடைக்கும். அவ்வாறு இல்லாமல் நீதிமன்றத்தில் இருக்கும் அந்தப் பெட்டகத்தில் முத்திரையிடப்பட்டுள்ள வாக்குமூலங்களை எடுப்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ எந்தவொரு நபருக்கும் உரிமை இல்லை. நீதவானுக்குக் கூட உரிமை இல்லை. ஒருவேளை கோட்டை நீதவான் நீதிமன்றத்திலிருந்து இந்த வழக்கு வேறு ஒரு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டால், அப்போது கோட்டை நீதவான் நீதிமன்றப் பெட்டகத்தில் உள்ள அந்த இரகசிய வாக்குமூலங்களை வழக்கை விசாரிக்கும் அடுத்த நீதிமன்ற நீதிபதியின் பெட்டகத்திற்கு மாற்ற முடியும். அது தவிர வேறு எந்தவொரு தரப்பினருக்கும் இந்த இரகசிய வாக்குமூலங்களைக் கொடுப்பதற்கோ அல்லது எடுப்பதற்கோ முடியாது. ஆனால் நீதவான் இசுரு நெத்திகுமார குறித்த இரகசிய வாக்குமூலங்கள் அனைத்தையும் சுரேஷ் சலேயின் சட்டத்தரணியான அசித சிறிவர்தனவிற்கு வழங்கியுள்ளார். இவ்வாறானதொரு சூழ்நிலையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்குக்குக் கூட தற்போது பாரதூரமான ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. ஏனென்றால், இரகசிய வாக்குமூலங்களை எதிர்த்தரப்பிடம் ஒப்படைத்ததன் மூலம், இப்போது இந்த வழக்கில் இரகசிய வாக்குமூலங்களை வழங்கியது யார்? அந்த வாக்குமூலங்களில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது? அவை அனைத்தும் தற்போது கோட்டாபய ராஜபக்சவின் கைக்கு சென்றுள்ளது. இந்த விபரங்கள் அம்பலமான பின்னர், இசுரு நெத்திகுமார நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு (JSC) மாற்றப்பட்டார். இவ்வாறு மாற்றிய உடனே, ராஜபக்ச குழுவும், அதேபோன்று 'ப்ரீ லோயர்ஸ்' (Free Lawyers) என்று சொல்லப்படும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன உள்ளிட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சியினர் ஊடகங்களில் அதற்கு எதிராக பாரிய குரல் எழுப்பினர்.