கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அங்கு பணியாற்றும் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்…

கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அங்கு பணியாற்றும் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் 2022 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அவை 2025 ஜனவரி 3ஆம் திகதிக்குள் நிறைவடைய வேண்டியிருந்ததாகவும், எனினும் இதுவரை பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் மற்றும் பொறியியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

திட்ட முகாமைத்துவப் பிரிவும் ஆலோசனைக் குழுவும் சுயாதீனமாக செயற்பட வேண்டிய நிலையில், சில பொறியியலாளர்கள் இரு தரப்பினருக்கும் சேவையாற்றும் நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார். இதனால் நலன் முரண்பாடு (Conflict of Interest) ஏற்படுவதுடன், திட்டத்தின் வெளிப்படைத்தன்மை தொடர்பிலும் பாரதூரமான கேள்விகள் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அபிவிருத்திப் பணிகள் சுயாதீனமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டிய போதிலும், அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், இத்திட்டத்திற்கான காலக்கெடு இதுவரை மூன்று தடவைகள் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காலநீடிப்புகளுக்கு அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய தகவல்களின் அடிப்படையில், மூன்றாவது காலநீடிப்பு 2026 ஜூலை 7ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், நான்காவது காலநீடிப்பு துறைமுக அதிகாரசபையின் அனுமதியின்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில கொடுப்பனவுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுதல், அறவிட வேண்டிய கட்டணங்கள் நீக்கப்படுதல் மற்றும் ஆரம்பகட்டப் பணிகளுக்கான கொடுப்பனவுகள் தொடர்ச்சியாக வழங்கப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

அனுமதியின்றி கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுவது பாரதூரமான பிரச்சினை எனவும், தற்போதைய சில கொடுப்பனவுகள் சட்டவிரோதமானவையாக இருக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இத்திட்டத்திற்குத் தேவையான மனிதவளம் போட்டித் தன்மையான முறையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக 2019ஆம் ஆண்டின் முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், குறித்த ஊழியர்களின் சம்பளத்தில் இதுவரை எந்தவொரு புதுப்பித்தலும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு முனையம் போன்ற பாரிய தேசியத் திட்டத்தில் எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் துறைமுக அமைச்சர் உரிய கவனம் செலுத்தி, திட்டத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து ஆராய வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.