லெபனான் ஆயுதப் படைகளுக்கு ஆலோசனை வழங்கி பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கலாஸ் தெரிவித்துள்ளார். ஐநா அமைதிப்படைக்கு மாற்றாகச் செயல்படுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கமல்ல. மாறாக,…

லெபனான் ஆயுதப் படைகளுக்கு ஆலோசனை வழங்கி பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கலாஸ் தெரிவித்துள்ளார். ஐநா அமைதிப்படைக்கு மாற்றாகச் செயல்படுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கமல்ல. மாறாக, லெபனான் தனது நாட்டின் பாதுகாப்பைத் தானே உறுதிசெய்து கொள்வதற்கான திறனை அதிகரிப்பதே எங்கள் இலக்கு" என்று காஜா கலாஸ் குறிப்பிட்டுள்ளார்.இந்தச் சிறப்புப் பயிற்சியில் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவை முதன்மையாகச் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.1978 ஆம் ஆண்டு இஸ்ரேல், தெற்கு லெபனான் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து அமைக்கப்பட்டு, கடந்த 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஐநா அமைதிப்படையின் பணிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில் இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டு வருகிறது. லெபனானின் ஆயுதப் படைகள் மற்றும் தனது சொந்தப் பிராந்தியத்தைப் பாதுகாக்கும் லெபனான் அரசின் திறனை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதற்கான திட்டமிடல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், வரும் அக்டோபர் மாதத்தில் ஐரோப்பிய பேரவையின் முறையான ஒப்புதலுடன் இத்திட்டத்தைத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். லெபனான் இராணுவம் மற்றும் அந்நாட்டின் பொலிஸ் படைகளுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி அளிக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்கான இராணுவ மற்றும் சிவிலியன் திட்டம் தொடர்பான முன்மொழிவை ஐரோப்பிய ஒன்றியத்தின் ராஜதந்திர சேவைப் பிரிவு சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.