தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் உத்தியோகபூர்வ சீட்டிழுப்பு முடிவுகளில் வெளியாகும் எண்களை அடிப்படையாகக் கொண்டு, நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத சூதாட்டம் சமூகத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் சிறில் எண்டனி…
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் உத்தியோகபூர்வ சீட்டிழுப்பு முடிவுகளில் வெளியாகும் எண்களை அடிப்படையாகக் கொண்டு, நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத சூதாட்டம் சமூகத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் சிறில் எண்டனி பெரேரா தெரிவித்துள்ளார்.
கோப் (COPE) உபகுழு முன்னிலையில் தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், இந்த சட்டவிரோத சூதாட்டத்தின் தீவிரம் தொடர்பில் தேசிய லொத்தர் சபையின் தலைவர் விரிவாக விளக்கமளித்துள்ளார்.
அவர் குறிப்பிட்டதன்படி, இந்த சட்டவிரோத சூதாட்டத்தின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது. இதன் தாக்கம் போதைப்பொருள் பாவனைக்கு அடுத்தபடியாக சமூகத்தில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிராமங்களில் தொடங்கி பெரும் சூதாட்டமாக மாறிய ‘கட்டம் வெட்டும்’ முறை சுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கிராமப்புறங்களில் சிறிய தொகைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட ‘கட்டம் வெட்டும்’ எனப்படும் இந்த சட்டவிரோத சூதாட்டம் தற்போது மிகப்பெரிய பணப் பந்தயமாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் 100 ரூபாய் போன்ற சிறிய தொகைகளில் இடம்பெற்ற இந்த சூதாட்டம், தற்போது சில பகுதிகளில் ஒரு கட்டத்திற்கு பல ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் பந்தயம் கட்டப்படும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது.
குறிப்பாக, அந்தந்த பகுதிகளில் நிலவும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்ப பந்தயத் தொகையும் மாறுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல் அறுவடை முக்கிய பொருளாதார நடவடிக்கையாக காணப்படும் மனம்பிட்டி போன்ற பகுதிகளில் ஒரு கட்டத்துக்கு சுமார் 30,000 ரூபாய் வரை பந்தயம் கட்டப்படுவதாகவும், இரத்தினக்கல் வர்த்தகம் அதிகமாக இடம்பெறும் இரத்தினபுரி போன்ற பகுதிகளில் ஒரு கட்டத்தின் பெறுமதி ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












