மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல - தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர். எந்தவொரு அதிகாரியினதும் கவனம் ஈர்க்கப்படாத நிலையில், கிராம மக்கள் தமக்குள்ள ஒரே ஒரு கிணற்று நீரை எத்தகைய சுத்திகரிப்பு…

மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல - தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

எந்தவொரு அதிகாரியினதும் கவனம் ஈர்க்கப்படாத நிலையில், கிராம மக்கள் தமக்குள்ள ஒரே ஒரு கிணற்று நீரை எத்தகைய சுத்திகரிப்புமின்றிப் பருகி வருகின்றனர். சுமார் 500 குடும்பங்கள் வாழும் இக்கிராமத்திற்கு, பல ஆண்டுகளுக்கு முன்பு தொண்டு நிறுவனம் ஒன்றினால் குழாய்க் கிணற்றுடன் கூடிய நீர்தாங்கி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அதிலிருந்து வெளிவரும் நீருடன் கற்கூளங்களும் (கற்பொடிகளும்) சேர்ந்து வருவதால், அவ்நீரைப் பருகுவதற்கு உகந்ததல்ல என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் காரணமாக, அவர்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் கிணறுகளை வெட்டி நீரைப் பருகத் தொடங்கினர். எனினும், நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அவர்களது வீடுகளில் உள்ள கிணறுகள் அனைத்தும் வற்றிப்போயுள்ளன.

இதையடுத்து, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகன வசதியுள்ளவர்கள் சுமார் 7 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து, வேறு கிராமங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நீரை விலைக்கு வாங்கிப் பருகுவதாகத் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், போக்குவரத்து வசதியற்ற மற்றும் பொருளாதார வசதியற்ற ஏழை மக்கள், கற்கூளம் கலந்த அசுத்தமான நீரையே தொடர்ந்தும் பருக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, தங்களது நீர் மூலத்திற்குத் தேவையான தூய நீர் சுத்திகரிப்பு அலகு ஒன்றை உடனடியாகப் பொருத்தித் தருமாறு அம்மக்கள் அதிகாரிகளிடம் கண்ணீருடன் வேண்டுகோள் விடுக்கின்றனர்.