2014ஆம் ஆண்டு கொழும்பு கம்பல் பூங்காவில் நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்ற ஆதரவாளர்களுக்கு, அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நிதியில் இருந்து மதிய உணவு வழங்கிய குற்றச்சாட்டில், முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜெயரத்னவுக்கு கொழும்பு உயர…

2014ஆம் ஆண்டு கொழும்பு கம்பல் பூங்காவில் நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்ற ஆதரவாளர்களுக்கு, அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நிதியில் இருந்து மதிய உணவு வழங்கிய குற்றச்சாட்டில், முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜெயரத்னவுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.இரண்டு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 7 ஆண்டுகள் வீதம் தண்டனை விதித்தது. எனினும், தண்டனைகள் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படுவதால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 2 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலதிக சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மே தின பேரணிக்காக தனியார் நிறுவனத்துக்கு 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அரச நிறுவனத்தின் நிதியில் இருந்து செலுத்தப்பட்டதாகவும், இது அரசியல் நடவடிக்கைக்காக பொது நிதியைப் பயன்படுத்திய செயலாகும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஊழல் என்பது அரச நிறுவனங்கள் மற்றும் நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் என்பதால், இத்தகைய குற்றங்களை சாதாரணமாகக் கருத முடியாது என நீதிபதி முகமது மிஹைல் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பியங்கர ஜெயரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவினால் மேலும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளதுடன், அவற்றில் சில தொடர்பான விசாரணைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17