கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயல்பட்டதாகக் கூறப்படும், ‘மாட்டியா’ என அழைக்கப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது…
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயல்பட்டதாகக் கூறப்படும், ‘மாட்டியா’ என அழைக்கப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான சந்தேகநபரான அவர், கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர். மலேசியாவில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். இதையடுத்து, நேற்று (25) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் ஆரம்பகட்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தல் (Interpol Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி கம்பஹா நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், ‘பஸ்பொட்டா’ என அழைக்கப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரும், அவருடன் இருந்த மற்றொருவரும் உயிரிழந்ததுடன், அங்கு இருந்த பலர் காயமடைந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவராக ‘மாட்டியா’ அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தக் கொலை மற்றும் கொலை முயற்சி தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. The post மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ‘மாட்டியா’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது appeared first on Battinaatham.

