(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றுவரை ஒரு சி.ரி ஸ்கானர் இயந்திரம் இல்லாத காரணத்தால் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குச் சரியான நேரத்தில் நோயறிதல் செய்ய முடியாத நிலை காணப்படுவதுடன், நீண்ட தூரப் பயணங்களினால் நோளிகள் உயிரிழக்கும் அவல…
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றுவரை ஒரு சி.ரி ஸ்கானர் இயந்திரம் இல்லாத காரணத்தால் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குச் சரியான நேரத்தில் நோயறிதல் செய்ய முடியாத நிலை காணப்படுவதுடன், நீண்ட தூரப் பயணங்களினால் நோளிகள் உயிரிழக்கும் அவலம் காணப்படுகிறது.மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, எப்போது இந்த சி.ரி ஸ்கானர் இயந்திரம் வழங்கப்படும் என்பதை அமைச்சர் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/ 2 இல் விசேடக்கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் கடுமையான உள்கட்டமைப்புப் பற்றாக்குறை மற்றும் அதனால் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் உயிர் ஆபத்துக்கள் குறித்து, சுகாதார அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையானது அந்த மாவட்டத்தில் வாழும் மக்களுக்கும் அதனைச் சுற்றியுள்ள பின்தங்கிய கிராமப்புற மக்களுக்கும் அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சைச் சேவைகளை வழங்கும் ஒரேயொரு மூன்றாம் நிலை சுகாதார நிறுவனமாகும். இந்த முதன்மை வைத்தியசாலையில் இன்றுவரை ஒரு சி.ரி ஸ்கானர் இயந்திரம் இல்லை என்பது மிகவும் துரதிஷ்டவசமானதாகும். இதன் காரணமாக மாதாந்தம் சுமார் 100 முதல் 125 நோயாளிகள் அவசரத் தேவைகளுக்காகவும், விபத்துக்களின் போது தலையில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறியவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, வவுனியா மற்றும் கிளிநொச்சி பொது வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் மூலம் மாற்றப்படுகின்றனர். இதனால், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குச் சரியான நேரத்தில் நோயறிதல் செய்ய முடியாமல் போவதோடு, நீண்ட தூரப் பயணங்களினால் பல உயிர்கள் வழியிலேயே பிரியும் ஆபத்துக்கள் தொடர்கின்றன.நோயாளிகளை வெளிமாவட்டங்களுக்கு மாற்றுவதால், மன்னார் மாவட்டத்தின் அம்புலன்ஸ் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, ஏனைய அவசர நோயாளர் போக்குவரத்துகளும் முடக்கப்படுகின்றன. ஏழை,மக்கள் தங்களது குடும்பத்தினருடன் வெளிமாவட்டங்களுக்குச் சென்று தங்கி நின்று சிகிச்சை பெறுவதால், பெரும் பொருளாதார மற்றும் சமூகச் சுமைகளை எதிர்கொள்கின்றனர். இங்கு மிக முக்கியமான விடயம் என்னவென்றால், மன்னார் பொது வைத்தியசாலையில் இதற்கான புதிய சி.ரி ஸ்கானர் கட்டிடம் ஏற்கனவே முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு தயாராக உள்ளது. அத்துடன்,இந்த இயந்திரத்தை இயக்குவதற்கும்,அறிக்கைகளை வழங்குவதற்கும் இரண்டு ஆலோசகர் கதிரியக்க நிபுணர்கள் தற்போது அங்கு நியமிக்கப்பட்டு கடமையில் உள்ளார்கள். அனைத்து உள்கட்டமைப்புகளும் இருந்தும், வெறும் இயந்திரம் இல்லாத காரணத்தினால் அந்த நிபுணர்களின் சேவைகளும் அங்கு வீணடிக்கப்படுகின்றன. மேலும்,கடந்த 24.04.2025 ஆம் திகதியன்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மன்னார் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது, '2026 ஆம் ஆண்டில் மன்னார் வைத்தியசாலைக்குக் கண்டிப்பாக சி.ரி ஸ்கானர் இயந்திரம் வழங்கப்படும்' என உத்தியோகபூர்வமாக உறுதியளித்திருந்தார். அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி ஏன் இன்னும் நிறைவேற்றப்படவில்லை?இதனை அடிப்படையாகக் கொண்டு, கௌரவ சுகாதார அமைச்சரிடம் நான் பின்வரும் கேள்விகளுக்கான தெளிவான பதில்களைக் கோருகின்றேன், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சி.ரி ஸ்கானர்இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக மதிப்பிடப்பட்டுள்ள ரூபா 250 மில்லியன் நிதியை, இந்த 2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுக்குள் வழங்குவதற்கு அமைச்சரவை நடவடிக்கை எடுத்துள்ளதா? இல்லையெனில் அதற்கான காரணங்கள் யாவை? சுகாதார அமைச்சர் கடந்த 2025 ஏப்ரலில் மன்னார் மண்ணில் வைத்து மக்களுக்கு வழங்கிய உத்தியோகபூர்வ வாக்குறுதி, 2026 ஆம் ஆண்டின் இந்த காலாண்டிற்குள் ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை? மன்னார் மாவட்ட மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, எப்போது இந்த சி.ரி ஸ்கானர் இயந்திரம் அங்கு கொண்டுவரப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும் என்பதை அமைச்சர் திட்டவட்டமாக அறிவிப்பாரா?என்று கேள்விகளை எழுப்பினார்.

