இலங்கையின் “சின்னக் கதிர்காமம்” எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமைமிகு தீர்த்தோற்சவம் நேற்று (28) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கதிர்காமத் திருத்தலத்தின் வழிபாட்டு முறைகளுடன் ஒத்த பல பாரம்பரிய பூஜை முறைகள் மண்…

இலங்கையின் “சின்னக் கதிர்காமம்” எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமைமிகு தீர்த்தோற்சவம் நேற்று (28) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கதிர்காமத் திருத்தலத்தின் வழிபாட்டு முறைகளுடன் ஒத்த பல பாரம்பரிய பூஜை முறைகள் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலும் நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. உலகில் முருக வழிபாட்டில் தனித்துவமானதும் பழமையானதுமான வழிபாட்டு மரபுகளைப் பேணிவரும் ஆலயங்களில் ஒன்றாகவும் மண்டூர் கந்தசுவாமி ஆலயம் கருதப்படுகிறது.

கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய வருடாந்த உற்சவம் 21 நாட்கள் இடம்பெற்ற நிலையில், அதன் நிறைவாக இன்று தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

இதனையொட்டி இன்று காலை ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன், முருகப்பெருமானின் வேல் தாங்கிய பேழைக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஆலயத்திற்குள் சிறுமி ஒருவர் பேழைக்கு தீப ஆராதனை செய்து வழிபட்ட பின்னரே, வேல் தாங்கிய பேழை தீர்த்தக்கரையை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் அடியார்கள் புடைசூழ, முருகப்பெருமானின் வேல் தாங்கிய பேழை மட்டக்களப்பு வாவிக்கு அருகிலுள்ள தீர்த்தக்கேணிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்வழிபாட்டு நிகழ்வுகளில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தீர்த்தோற்சவம் நிறைவடைந்த பின்னர், முருகப்பெருமானின் பேழை மீண்டும் ஆலயத்தை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டபோது, தெய்வானையம்மன் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெறும் பாரம்பரிய தீப ஆராதனை நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது சிறுமிகள் சிலரும், வில் மற்றும் அம்பு தாங்கி வந்த சிறுவன் ஒருவரும் மயங்கி விழும் நிகழ்வு பாரம்பரியமாக இடம்பெற்று வருவதாக ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

மயங்கி விழுந்த சிறுமிகள் வள்ளியம்மன் ஆலயத்தின் பின்புறப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், முருகப்பெருமானின் வேலும் வள்ளியம்மன் ஆலயத்திற்குள் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வள்ளியம்மனுக்கு தீர்த்தம் தெளிக்கும் நிகழ்வு இடம்பெற்றபோது, மயக்கமடைந்திருந்த சிறுமிகள் மயக்கம் தெளிந்து எழுந்ததாகக் கூறப்படும் பாரம்பரிய நிகழ்வும் இடம்பெற்றது.

நூற்றாண்டுகள் பழமையான வழிபாட்டு மரபுகளையும் தனித்துவமான சடங்கு முறைகளையும் தன்னகத்தே கொண்ட மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் இவ்வாண்டு உற்சவமும் பக்தர்களின் பெரும் பங்கேற்புடன் நிறைவடைந்துள்ளது.