மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அரச திணைக்களங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் நடவடிக்கையில் முறைகேடுகள் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார், இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு துறைசார் அதிக…

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அரச திணைக்களங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் நடவடிக்கையில் முறைகேடுகள் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார், இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு துறைசார் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு பாலமீன்மடுவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

மாவட்டத்திலுள்ள சில அரச திணைக்களங்களின் வாகனங்களுக்கு தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக டீசல் வழங்கப்பட்டு வருவதாகவும், அதற்கான கொடுப்பனவுகளை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மாதாந்தம் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறையைப் பயன்படுத்தி சில சாரதிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு இடையில் முறைகேடுகள் இடம்பெறுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உதாரணமாக, அரச வாகனமொன்றுக்கு 100 லீற்றர் டீசலுக்கான அனுமதி பெறப்பட்ட நிலையில், அதில் 50 லீற்றர் மாத்திரம் வாகனத்திற்கு நிரப்பப்பட்டு, மீதமுள்ள 50 லீற்றர் எரிபொருளுக்கான பணம் முறைகேடாகப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய டீசல் விலையை அடிப்படையாகக் கொண்டு, இவ்வாறான நடவடிக்கைகளால் அரசாங்கத்திற்கு மாதாந்தம் பல இலட்சம் ரூபாய் நிதி இழப்பு ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகள் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், முறைகேடுகளுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உடந்தையாக இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவற்றின் அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது திணைக்கள அதிகாரி ஒருவரை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அனுப்பி கண்காணிப்பை மேற்கொள்வது அல்லது அரசாங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் முறைகேடுகளைத் தடுக்க முடியும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

மேலும், அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்படுவது மக்களின் வரிப்பணத்தையே பாதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தின் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அரச வாகனங்கள் உத்தியோகபூர்வ பணிகளுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் மற்றுமொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அரச அதிகாரிகள் தனிப்பட்ட அல்லது உத்தியோகபூர்வமற்ற நிகழ்வுகளுக்குச் செல்ல அரச வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் உள்ளிட்ட அரச வளங்கள் வீணடிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் பொலிஸார் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்தால் தம்மிடம் உள்ள ஆதாரங்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

அரச நிதி மற்றும் வளங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.