ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணியும் களஆய்வும் வெற்றிகரமாக முன்னெடுக்கப…
ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணியும் களஆய்வும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நடவடிக்கையில், கல்லடி பிரதான வீதியின் வடிகான்களைத் துப்புரவு செய்யும் பணிகளுடன், வீடுகள் மற்றும் பொது இடங்களைச் சோதனையிடும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இவ்வேலைத்திட்டம் குறித்து மாநகர சபை மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்சயன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரையின் மாநகர எல்லைக்குள் தொடர்ச்சியாக டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய தினம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகள், மட்டக்களப்பு பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் ஆகியோர் மாநகர சபையுடன் இணைந்து இப்பணியில் ஈடுபட்டனர்.
இராணுவக் கட்டளைப் பிரிவு அதிகாரியின் கீழ் சுமார் 20 இராணுவ உத்தியோகத்தர்களும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமைப் பொறியியலாளரின் ஒருங்கிணைப்பில் 40 ஊழியர்களும் இப்பணியில் கலந்துகொண்டு கல்லடி பிரதான வீதியின் வடிகான்களை முழுமையாகத் துப்புரவு செய்தனர்.
இதன்போது வீடுகள்தோறும் சோதனைகள் நடத்தப்பட்டு, டெங்கு லார்வாக்கள் பெருகக்கூடிய நிலையிலிருந்த கழிவுகள் மற்றும் கொள்கலன்கள் அனைத்தும் மாநகர சபையின் கழிவகற்றல் வாகனங்கள் மூலம் உடனடியாக அகற்றப்பட்டன.
மாநகர எல்லைக்குள் டெங்குப் பரவலுக்கு முக்கிய காரணியாக விளங்கும், நீண்டகாலமாக துப்புரவு செய்யப்படாமலும் சொத்து வரி செலுத்தப்படாமலும் கைவிடப்பட்டுள்ள வெற்றுக்காணிகளுக்கு எதிராக மாநகர சபை கடுமையான சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
உரிமையாளர்கள் இனம் காணப்படாத வெற்றுக்காணிகளை சட்டப்படி மாநகர சபையினால் சுவீகரிக்க முடியும். எனினும், அதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்பதால், தற்காலிகமாக மாற்று நடவடிக்கையாக கல்லடி பிரதேசத்தில் மாத்திரம் அடையாளம் காணப்பட்ட 6 வெற்றுக்காணிகளில் விசேட அறிவித்தல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
‘இக்காணி மாநகர சபையினால் சுவீகரிக்கும் நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது’ என்ற எச்சரிக்கை பலகையைக் கண்டு, ஏற்கனவே இரண்டு காணிகளின் உரிமையாளர்கள் எங்களைத் தொடர்புகொண்டு காணிகளைத் துப்புரவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
மாநகர சபை எல்லைக்குள் மொத்தம் 22 காணிகள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நேற்று நடைபெற்ற பிரதேச செயலாளர் கூட்டத்தில் அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் இது குறித்து விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, துப்புரவு செய்யப்படாத ஏனைய வெற்றுக்காணிகளின் விபரங்களும் திரட்டப்பட்டு, அவற்றுக்கெதிராகவும் மாநகர சபையினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வர், மாநகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது The post மட்டக்களப்பு கல்லடியில் டெங்கு ஒழிப்பு விசேட சிரமதானப் பணி appeared first on Minnal 24 News.

