மட்டக்களப்பில் விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் குளங்களில் இருந்து குடிநீர் தேவைக்காக நீரைப் பெறுவதை உடனடியாக நிறுத்தி, குடிநீருக்கான தனித்திட்டமொன்றை அமைக்குமாறு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட விவசாயிகள் இன்று திங்கட்கிழமை (31) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந…
மட்டக்களப்பில் விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் குளங்களில் இருந்து குடிநீர் தேவைக்காக நீரைப் பெறுவதை உடனடியாக நிறுத்தி, குடிநீருக்கான தனித்திட்டமொன்றை அமைக்குமாறு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட விவசாயிகள் இன்று திங்கட்கிழமை (31) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மட்டக்களப்பில் சுமார் 65 சதவீதமான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்ற நிலையில், சுமார் 40 சதவீதமான விவசாய நிலங்களுக்கே நீர்ப்பாசன வசதி கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய கடுமையான வறட்சியால் விவசாயக் குளங்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், உன்னிச்சைக் குளத்தில் இருந்து குடிநீர் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நீர் பெறப்படுவதால் விவசாயத்திற்கு தேவையான நீரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விவசாயக் குளங்களில் இருந்து தொடர்ந்து நீர் பெறப்படுவதால் யால மற்றும் மகா போகங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், விவசாயிகளின் வருமானம், குடும்பங்களின் பொருளாதாரம் மற்றும் பிள்ளைகளின் கல்வி உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா போன்ற பகுதிகளில் குடிநீருக்கான தனித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பிலும் குடிநீருக்கான நிரந்தரத் திட்டமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பைச் சூழ கடல் வளம் காணப்படுவதால், கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக வழங்கும் திட்டத்தை மத்திய அரசாங்கமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீருக்கான நிரந்தரத் திட்டம் நடைமுறைக்கு வரும் வரை, விவசாயக் குளங்களில் இருந்து குடிநீர் தேவைக்காக நீரைப் பெறக்கூடாது என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர், அரசாங்க அதிபர் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

