மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளிக்குள் தவறி விழுந்து இரண்டு வயது குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே இவ்வ…
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளிக்குள் தவறி விழுந்து இரண்டு வயது குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்று (01.09.2026) காலை 10.30 மணியளவில் வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியின் அருகே குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததாகவும், எதிர்பாராத விதமாக தலைகீழாக வாளிக்குள் விழுந்து நீரில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, உறவினர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன் பழுகாமம் வைத்தியசாலைக்கு சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டார்.
உடற்கூற்றுப் பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் நேற்று மாலை 6 மணியளவில் பழுகாமம் வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

