எதிர்வரும் ஆவணி 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மடு அன்னையின் ஆவணித் திருவிழா தொடர்பாக விசேட முதலாவது கலந்துரையாடல் இன்று (31) இடம்பெற்றது.மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் இடம் பெற்று 14 ஆம் திகதி மாலை…
எதிர்வரும் ஆவணி 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மடு அன்னையின் ஆவணித் திருவிழா தொடர்பாக விசேட முதலாவது கலந்துரையாடல் இன்று (31) இடம்பெற்றது.மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் இடம் பெற்று 14 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும் அதனை தொடர்ந்து 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் ஆவணி திருவிழாவிற்கு வருகை தர உள்ள தோடு,எதிர்வரும் மடு அன்னையின் திருவிழா காலப்பகுதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை என்பதினாலும் இம்முறை பல இலட்சக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தர உள்ளார்கள் என்பதன் அடிப்படையில் அனைத்து வித ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.உரிய நடவடிக்கைகுறிப்பாக சுகாதாரம் , மருத்துவம், சாரணர் சேவை,கழிவு அகற்றும் நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம் , மின்சாரம், உணவு மற்றும் கடைகள் , போக்குவரத்து, சுற்று நீதிமன்றம் உள்ளிட்ட விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதன் போது கலந்து கொண்ட திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.இந்த நிலையில் எதிர்வரும் 11ஆம் திகதி காலை 11 மணிக்கு மடு திருத்தலத்தில் 2 ஆவது கலந்துரையாடலை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார் மற்றும் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் திணைக்கள தலைவர்கள்,பிரதேச சபைகளின் செயலாளர்கள்,தவிசாளர்கள்,திணைக்கள தலைவர்கள்,கடற்படை ,இராணுவம்,பொலிஸ் உயர் அதிகாரிகள் ,வைத்தியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.











