(நெவில் அன்தனி) பிறிஸ்டல் கவுன்டி மைதானத்தில் சனிக்கிழமை (28) இரவு நடைபெற்ற குழு 2 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 6 விக்கெட்களால் வெற்றிகொண்ட அயர்லாந்து, ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் தனது முதலாவது வெற்றியை சுவைத்து வரலாறு படைத்தது. இந்தப் போட்டி முடிவை அடுத்து இலங்கையின…
(நெவில் அன்தனி) பிறிஸ்டல் கவுன்டி மைதானத்தில் சனிக்கிழமை (28) இரவு நடைபெற்ற குழு 2 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 6 விக்கெட்களால் வெற்றிகொண்ட அயர்லாந்து, ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் தனது முதலாவது வெற்றியை சுவைத்து வரலாறு படைத்தது. இந்தப் போட்டி முடிவை அடுத்து இலங்கையின் அரை இறுதிக் கனவு கலைந்துபோனது.
மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் 2014இல் அறிமுகமானதிலிருந்து போட்டிக்கு முன்னர் வரை 0 - 21 என இருந்த அயர்லாந்தின் பெறுபெறுகள் இன்றைய வெற்றியுடன் 1 - 21 என மாறியுள்ளது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வி அடைந்ததால் அதன் அரை இறுதி வாய்ப்பு தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவில் தங்கி இருக்கிறது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெறவேண்டும் என மேற்கிந்தியத் தீவுகள் வீராங்கனைகள் தற்போது பிரார்த்திக் கொண்டிருப்பார்கள். இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆரம்ப வீராங்கனை அணித் தலைவி ஹேலி மெத்யூஸ் 22 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட மத்திய வரிசையில் சினெல் ஹென்றி (27 ஆ.இ.), டியேந்த்ரா டொட்டின் (21), ஸ்டெஃபானி டெய்லர் (16) ஆகியோர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். ஒட்டுமொத்தத்தில் மேற்கிந்தியத் தீவுகளின் வீராங்கனைகள் தடுமாற்றம், பதற்றத்துக்கு மத்தியில் மோசமான அடி தெரிவுகளால் விக்கெட்களைத் தாரைவார்த்தனர். பந்துவீச்சில் காரா மறே 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அய்மி மெகயர் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 18.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
ஓர்லா ப்ரெண்டகாஸ்ட் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 63 ஓட்டங்களைப் பெற்று அயர்லாந்தின் வெற்றியை இலகுவாக்கினார். அவரை விட ஆரம்ப வீராங்கனை அமி ஹன்டர் 28 ஓட்டங்களையும் ரெபெக்கா ஸ்டோக்கெல் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஷ்மினி முனிசார் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகி: ஓர்லா ப்ரெண்டகாஸ்ட்

