முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய DFCC வங்கி கணக்கு ஒன்றில் பணம் வைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், தனது பெயரைத் தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என பிரபல சிங்கள நடிகை ரீத்து…

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய DFCC வங்கி கணக்கு ஒன்றில் பணம் வைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், தனது பெயரைத் தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என பிரபல சிங்கள நடிகை ரீத்து ஆகர்ஷா பகிரங்க அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

குறித்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் 'ரீத்து ஆகர்ஷா' என்ற பெயரில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள DFCC வங்கிக் கணக்கை தாம் ஒருபோதும் பராமரிக்கவில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு எண் தன்னுடையது அல்ல என்றும் நடிகை ரீத்து ஆகர்ஷா சுட்டிக்காட்டியுள்ளார். சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் தனது பெயரில் அத்தகைய வங்கிக் கணக்கு எதுவுமே குறித்த வங்கியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தி, DFCC வங்கியினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றையும் நடிகை ரீத்து ஆகர்ஷா ஊடகங்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்டவிரோத சொத்துக்களை சேர்த்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அக் காலப்பகுதியில் தாம் பாடசாலை மாணவியாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்ததாக நடிகை ரீத்து ஆகர்ஷா குறிப்பிட்டுள்ளார்.

தனது நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்படுத்தியமை தொடர்பில் பொய்ப் தகவல்களைப் பரப்பிய ஊடக நிறுவனங்கள், சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இனிவரும் காலங்களில் இவ்வாறான பொய்களையோ, திருத்தப்பட்ட அல்லது தவறாக வழிநடத்தும் செய்திகளையோ வெளியிடுபவர்கள் அல்லது பகிர்ந்துகொள்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நடிகை ரீத்து ஆகர்ஷா எச்சரித்துள்ளார்.