தலவாக்கலை – லிந்துலை நகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்ததன் காரணமாகவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் தலவாக்கலை – லிந்துலை நகரசபை உறுப்பினர் அசங்க சம்பத் பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். த…

தலவாக்கலை – லிந்துலை நகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்ததன் காரணமாகவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் தலவாக்கலை – லிந்துலை நகரசபை உறுப்பினர் அசங்க சம்பத் பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். தனக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் முறையாக முன்வைக்கப்படாத நிலையில், கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மகிந்தவின் வழிகாட்டுதல் தலவாக்கலையில் இன்று 20ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வழிகாட்டுதலின் கீழ், 24 வருடங்களுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தான் கட்சிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில், தன் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாமல் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தலவாக்கலை – லிந்துலை நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் காணி முறைகேடுகள், முச்சக்கரவண்டி தரிப்பிட விவகாரம், தீபாவளி மற்றும் பொங்கல் சந்தைகள், சட்டவிரோத கட்டட நிர்மாணங்கள், நிதி முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் அசங்க சம்பத் பீரிஸ் தெரிவித்தார்.போலியான குற்றச்சாட்டு

இந்த முறைப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டதாகக் கருதும் சிலர், கட்சியின் உயர் மட்டத்திற்கு தமக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எனினும், அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படாமல், தமது தரப்பை விளக்குவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படாமல் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனால் பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.கட்சியின் முக்கியஸ்தர்கள்

இந்த விடயம் தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் தாம் நேரடியாக எடுத்துரைத்துள்ளதாகவும், எனினும் கட்சியின் முக்கியஸ்தர்கள் அவரது கருத்துக்களைக் கூட கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அசங்க சம்பத் பீரிஸ் தெரிவித்தார். இவ்வாறான நிலைமை தொடருமானால், பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதனிடையே, பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து தமக்கு அழைப்புகள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், கொள்கை ரீதியாக மகிந்த ராஜபக்ஸ அரசியலில் இருக்கும் வரை வேறு எந்தக் கட்சியிலும் இணைவதற்கு தாம் தயாரில்லை எனவும் தெரிவித்தார்.

தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் முன்னாள் நகரசபை உறுப்பினர் அசங்க சம்பத் பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.