இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகளைப் போலப் போலி வேடமிட்டு பல மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கடிதத் தலைப்புகளைப் பயன்படுத்தி அதிநவீன முறையில் நிதி மோசடி செய்யப்பட்ட…

இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகளைப் போலப் போலி வேடமிட்டு பல மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கடிதத் தலைப்புகளைப் பயன்படுத்தி அதிநவீன முறையில் நிதி மோசடி செய்யப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடிக்காரர்கள் முதலில் தொலைபேசி அழைப்புகள் அல்லது சமூக ஊடகங்கள் வழியாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதி விவரங்களைக் கண்டறிவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகளில் உள்ள பணம் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்டது எனக் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அதுகுறித்து நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறி அச்சுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்களின் பயத்தை அதிகரிக்க, மத்திய வங்கியின் போலி கடிதத் தலைப்புகள், அதிகாரிகளின் போலி கையொப்பங்கள் மற்றும் ரப்பர் முத்திரைகள் பொறிக்கப்பட்ட ஆவணங்களை மோசடிக்காரர்கள் அனுப்பி வைக்கின்றனர் என எச்சரிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காகப் பணத்தைச் சரிபார்க்க வேண்டும் எனக் கூறி, ஒரு தனியார் வங்கிக் கணக்கிற்குத் தொகையை மாற்றுமாறு அறிவுறுத்துகின்றனர். இந்தக் கணக்கு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரியுடையது எனக் கூறி, வைப்புத் தொகையில் பாதியை முதலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றனர். பணம் வைப்பு செய்யப்பட்டதற்கான ரசீதை அனுப்பிய பின், பணத்தைச் சரிபார்த்துவிட்டு மீண்டும் பழைய கணக்கிற்கே மாற்றுமாறு கோரும் பொலிஸ் கடிதம் ஒன்றை வழங்குவதாகவும் கூறி நம்ப வைக்கின்றனர். இந்த மோசடிக்காரர்களிடம் பொலிஸ் சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் போலி ரப்பர் முத்திரைகள் போன்றவை கைவசம் உள்ளதால், அவர்கள் மிகவும் திட்டமிட்டு இக்குற்றங்களைச் செய்து வருகின்றனர். ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதியவர்களே இந்த மோசடிகளுக்கு அதிகம் சிக்கக்கூடிய அபாயம் உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் இது குறித்து விழிப்புடனும் அவதானத்துடனும் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.