நடப்பு ஆண்டில் பதிவான டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் வரையில் நாட்டில் பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்திருந்ததாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஒரு மாதத்தி…
நடப்பு ஆண்டில் பதிவான டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் வரையில் நாட்டில் பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்திருந்ததாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 29,962 டெங்கு பாதிப்புகள் கடந்த ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளன. ஜூன் மாதத்தில் 21,533 பாதிப்புகளும், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 8,701 பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.
ஜனவரியில் 7,866 டெங்கு பாதிப்புகளும், பெப்ரவரியில் 5,721 பாதிப்புகளும், மார்ச்சில் 6,013 பாதிப்புகளும், ஏப்ரலில் 5,651 பாதிப்புகளும், மே மாதத்தில் 8,590 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.டெங்கு பாதிப்புகள் இதற்கிடையே நாட்டில் உள்ள மொத்த டெங்கு பாதிப்புகளில், 52.93 சதவீதம், அதாவது 49,771 பாதிப்புகள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளன.
தென் மாகாணத்தில் 13,763 பாதிப்புகளும், மத்திய மாகாணத்தில் 8,519 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. மாவட்ட அளவில் அதிகபட்சமாக 20,034 டெங்கு பாதிப்புகள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 18,652 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 3,787 கொழும்பு மாநகர சபை பகுதியைச் சேர்ந்தவை.
கண்டி மாவட்டத்தில் 6,818, களுத்துறையிலிருந்து 6,093, காலியிலிருந்து 6,079, இரத்தினபுரியிலலிருந்து 5,160, மாத்தறையிலிருந்து 5,003, கேகாலையிலிருந்து 2,713, குருநாகலையிலிருந்து 2,651 மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து 2,510 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
இதற்கிடையே நாடு முழுவதும் 76 டெங்கு நோய் உயர் அபாய சுகாதார அலுவலர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை தவறாமல் சுத்தம் செய்து அழிக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர். மேலும், காய்ச்சல் ஏற்பட்டால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் உடனடியாக சிகிச்சை பெறுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












