நண்பரின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட 36 வயதுடைய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 20 இ…
நண்பரின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட 36 வயதுடைய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதமாக செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தாயினால் கைவிடப்பட்ட நிலையில், தந்தையின் பராமரிப்பில் வசித்து வந்த 11 வயதுடைய சிறுமியே குறித்த பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுமியின் தந்தையின் நண்பரான 36 வயதுடைய குறித்த நபரே இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் 2016ஆம் ஆண்டு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் பீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, குறித்த நபருக்கு எதிராக 2025ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.எனினும், வழக்கு நடவடிக்கைகளின் போது குறித்த எதிரி தலைமறைவாகியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, எதிரி இன்றிய நிலையில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டது.
வழக்கு விசாரணையின்போது அரச சட்டவாதியினால் நெறிப்படுத்தப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்த நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்தது.இதனையடுத்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, குறித்த எதிரிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.அத்துடன், பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதமாக செலுத்துமாறும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.தண்டனைத் தீர்ப்பை வழங்கியபோது, வழக்கு நடவடிக்கைகளின்போது எதிரி தலைமறைவாகியிருந்தமை, குறித்த சம்பவத்தினால் சிறுமிக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் கடுமையான உடல் மற்றும் உள பாதிப்புகள், அத்துடன் சமூகத்தில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் ஆகியவற்றை நீதிமன்றம் கவனத்தில் கொண்டதாக நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நீதித்துறை கடுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டுவதாக குறிப்பிடப்படுகிறது.
இவ்வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ வழக்கை நெறிப்படுத்தியிருந்தார்.












