நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் வன்முறை, சுரண்டல் மற்றும் தீவிர வறுமைக்கு ஆளாகும் அதிக ஆபத்தில் உள்ளதாக ஐ.நா பெண்கள் அமைப்பு எச்சரித்துள்ளது. இத்தகைய பேரிடர்கள் ஏற்கனவே சமூகத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மையை மேலும் மோ…
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் வன்முறை, சுரண்டல் மற்றும் தீவிர வறுமைக்கு ஆளாகும் அதிக ஆபத்தில் உள்ளதாக ஐ.நா பெண்கள் அமைப்பு எச்சரித்துள்ளது. இத்தகைய பேரிடர்கள் ஏற்கனவே சமூகத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மையை மேலும் மோசமாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா அமைப்பின் தரவுகளின்படி, நேபாளத்தின் ரசுவா மற்றும் நுவாகோட் ஆகிய மாவட்டங்களில் மட்டும் சுமார் 1,60,000 பெண்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பேரிடரின் முழுமையான பாதிப்புகள் இன்னும் கணக்கிடப்பட்டு வரும் நிலையில், சூழ்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக நேபாளத்திற்கான ஐ.நா பெண்கள் அமைப்பின் பிரதிநிதி பட்ரீஷியா பெர்னாண்டஸ்-பச்சேகோ தெரிவித்துள்ளார். இயற்கைப் பேரழிவுகள் நிகழும்போது, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பெருமளவில் அதிகரிக்கின்றன. பலர் சுரண்டலுக்கும் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகின்றனர். வளங்கள் பற்றாக்குறையாக இருக்கும்போது, பெண்களும் சிறுமிகளுமே உணவும் மருந்தும் இன்றி அதிகம் தவிக்கின்றனர். முந்தைய பேரிடர் அனுபவங்களின்படி, ஆண்களை விட பெண்களே அதிகளவில் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என தெரிவித்துள்ளார். பேரிடருக்குப் பிறகு, பெண்கள் வன்முறை மற்றும் பொருளாதாரச் சீரழிவை எதிர்கொள்வதுடன், வீட்டுப் பராமரிப்புப் பணிகள் மற்றும் குடிநீர் சேகரித்தல் போன்ற கூடுதல் சுமைகளையும் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். மேலும், வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் பெண்களிடையே குறைந்த எழுத்தறிவு விகிதமே நிலவுவது, இந்நெருக்கடியான சூழலைச் சமாளிப்பதில் கூடுதல் சவாலாக அமைந்துள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.












