நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள பாடசாலையை நோக்கி ஆபத்தான முறையில் பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தில் இருந்து, பாடசாலை அதிபரின் துரிதமான நடவடிக்கையால் 1,643 மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். திரிசூலி பள்ளத்தாக்கில் உள்ள திரிபுவன் திரிசூலி இடைநிலைப் பாடசாலையின் ஆங்கில ஆசிரியரு…
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள பாடசாலையை நோக்கி ஆபத்தான முறையில் பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தில் இருந்து, பாடசாலை அதிபரின் துரிதமான நடவடிக்கையால் 1,643 மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
திரிசூலி பள்ளத்தாக்கில் உள்ள திரிபுவன் திரிசூலி இடைநிலைப் பாடசாலையின் ஆங்கில ஆசிரியரும் அதிபருமான 47 வயது ராஜேந்திர தவாடி, பாடசாலையில் இருந்தபோது இப்பகுதியில் மிகப்பெரிய வெள்ளம் வரவுள்ளதாக அவருக்கு எச்சரிக்கை வந்தது. உடனடியாக பாடசாலையைக் காலி செய்யும்படி அவர் உத்தரவிட்டு, நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூரமான திடீர் வெள்ளத்தில் இருந்து 1,643 மாணவர்களைக் காப்பாற்ற உதவினார்.
புதன்கிழமை காலை 9:20 மணியளவில், அருகிலுள்ள ஒரு கிராமத்தை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டதாக அவரது நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து எச்சரித்தார். உடனடியாக அங்கிருந்து தப்பியோடும்படி அவர் தவாடியிடம் கூறியதாக 'தி டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
தொடக்கத்தில் பாடசாலை பாதுகாப்பாக இருப்பதாகவே தவாடி நினைத்தார். மூன்று மாடிகளைக் கொண்ட அந்தக் கான்கிரீட் கட்டிடம் ஆற்றுக்கு மேல் சுமார் 60 மீட்டர் உயரத்தில் அமைந்திருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் ஒரு மாணவரின் பெற்றோர் அவசரமாகப் பாடசாலைக்கு வந்து, தண்ணீர் மிக வேகமாக உயர்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
உடனே அவர் பாடசாலை மணியை அடித்து, வகுப்பறைகளில் இருந்து மாணவர்களை வெளியே அழைத்துச் செல்லுமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பாடசாலைப் பேருந்து ஓட்டுநர்களுக்குத் தொடர்புகொண்டு உடனடியாகத் திரும்பி வருமாறு கூறினார். ஆனால், அதற்குள் தொடர்பு கொள்ள முடியாத ஒரு பேருந்து ஏற்கனவே பாலத்தைக் கடந்துவிட்டிருந்தது.
மாணவர்கள் அனைவரும் உயர்வான பகுதிகளை நோக்கி நடக்கத் தொடங்கினர். ஒரு மாணவிக்கு பீதி (பானிக் அட்டாக்) ஏற்படவே, அவர் ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றப்பட்டு மேடான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மற்ற மாணவர்கள் ஓடினர், தவாடி அவர்களுக்குப் பின்னால் சென்றார். இறுதியில் மாணவர்கள் அனைவரும் ஒரு போதி மரத்தின் கீழ் தஞ்சம் புகுந்தனர்.
சிறிது நேரத்தில் வெள்ளநீர் அப்பகுதி முழுவதும் பாய்ந்தோடியது. பாடசாலை உட்பட கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளைச் சேறு, பாறைகள், பனி மற்றும் குப்பைகள் அடித்துச் சென்று அழித்தன. இருப்பினும், அனைத்து மாணவர்களும் (1,643 பேர்) உயிர் பிழைத்தனர். பெரும்பாலான பாடசாலை ஊழியர்களும் தப்பினர். எனினும், இரண்டு ஊழியர்கள் உயிரிழந்தனர்.
சமூக வரலாற்று ஆசிரியரான 32 வயது சந்தோஷ் பதியார், ஆற்றுக்கு அருகில் தான் வாடகைக்கு எடுத்த அறைக்குத் காலை உணவு சமைக்கத் திரும்பியபோது அடித்துச் செல்லப்பட்டார். பாடசாலை வளாகத்தின் கதவுகளைப் பூட்டுவதற்காகத் திரும்பச் சென்ற பாடசாலை துப்புரவுத் பணியாளர் சுல்தான் லமாவும் உயிரிழந்தார்.
நேபாள-திபெத் எல்லையின் அருகில் உள்ள லாங்தாங் லிபாங் சிகரத்திலிருந்து ஏராளமான பனியும் பாறைகளும் திடீரெனச் சரிந்து விழுந்ததால் இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மாபெரும் பாறைப் பகுதி லெண்டே கோலா ஆற்றின் மேல் பகுதியில் சுமார் 1,200 மீட்டர் உயரத்திலிருந்து சரிந்து விழுந்தது.
இந்த வெள்ளப்பெருக்கினால் நேபாளம் மற்றும் திபெத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. தற்போதைய நிலவரப்படி நேபாளத்தில் 768 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 2,500-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. திபெத்தில் 16 பேர் உயிரிழந்ததாகவும், 546 பேரைக் காணவில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது.
இந்த வெள்ளத்தால் பல நீர்மின் திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கப்பாதைகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் நேபாள ராணுவம் குழாய் மூலம் காற்றைச் செலுத்தியுள்ளது.
நேபாளத்திற்கு உதவ இந்தியா தரப்பில் 11 பேர் கொண்ட மீட்புக் குழுவும், சீனா தரப்பில் 9 பேர் கொண்ட சுரங்கப்பாதை மீட்புக் குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

