மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில், இரண்டு வயது எட்டு மாதமான குழந்தையொன்று நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றுள்ளதாகக் கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர். கொக்கட்டிச்சோலை கற்சே…

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில், இரண்டு வயது எட்டு மாதமான குழந்தையொன்று நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றுள்ளதாகக் கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை கற்சேனை முல்லை வீதியைச் சேர்ந்த நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குழந்தை வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகத் தலைகீழாக வாளிக்குள் விழுந்து நீரில் மூழ்கி மூச்சுத்திணறலுக்குள்ளாகியுள்ளான்.

உடனே உறவினர்கள் குழந்தையை மீட்டுப் பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாகத் திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்தார்.

உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சிறுவனின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனகராஜா சரவணன்