நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 22 கைதிகள் மற்றும் 10 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இச்சம்பவத்தின் போது 106 கைதிகளும் 21 சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகத் அமைச்சர் தெரிவித்துள்ளார்.பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட மேலதிக நிவாரண நடவடிக்கைகளை பரிசீலிப்பதற்காக ஜனாதிபதி குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். உயிரிழந்த அதிகாரிகளுக்கான இழப்பீட்டுத் தொகை, ஓய்வூதியக் கொடுப்பனவுகள் மற்றும் அவர்கள் பெற்ற கடன்கள் தொடர்பாக உரிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. காயமடைந்த அதிகாரிகளின் உடல் நிலை மற்றும் ஊனமுற்ற தன்மையின் அளவை மதிப்பிட்டு, அவர்களுக்குத் தேவையான பொருத்தமான நிவாரணப் பரிந்துரைகளை இந்தக் குழு வழங்கும் எனவும் அமைச்சர் நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.












