நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயலல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (10) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ரஞ்சன் ர…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயலல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (10) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ரஞ்சன் ராமநாயக்க,

சிறைச்சாலையின் உள்ளே ஒரே அறையில் அல்லது வார்டில் நூற்றுக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு ஒன்றாக வாழும் சூழலில், இவ்வாறான மோதல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று என அவர் சுட்டிக்காட்டினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை

இத்தகைய சம்பவங்கள் இன்றும் அல்லது நாளையும் கூட மீண்டும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்த அவர், தானும் கடந்த காலங்களில் வெலிக்கடை மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ போன்ற சிறைச்சாலைகளில் கைதியாக இருந்தவன் என்ற ரீதியில் இந்த அனுபவங்களை நன்கு அறிவதாகவும், தானும் இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்ட அறை ஒன்றிலேயே அடைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

சிறைச்சாலை மோதல்கள் மற்றும் அங்குள்ள நிலமைகள் குறித்து சமூகத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுவதாகவும், சிலர் அங்கு போதிய வசதிகள் இல்லை என்று கூறும் அதேவேளை, இன்னும் சிலர் சிறைச்சாலை என்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல் அல்ல என்று வாதிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு ஒரு அரசாங்கமாகவோ அல்லது அமைச்சராகவோ பொறுப்பேற்றுக் கொண்டமை பாராட்டுக்குரியது என ரஞ்சன் ராமநாயக்க வலியுறுத்தினார்.

இதற்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற பெரிய பேரழிவுகளுக்குக் கூட யாரும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவத்திற்குப் பொறுப்பான அமைச்சர், "நான் இதற்குப் பொறுப்பேற்கிறேன்" என்று தைரியமாக முன்வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்குரிய தலைவர்கள் பொறுப்பேற்பதை நாம் பார்த்திருக்கிறோம் என கூறிய ரஞ்சன் ராமநாயக்க, உள்நாட்டில் இந்த அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட துணிச்சலான மற்றும் நேர்மையான குணத்தை தான் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.