நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையின் போது உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 10 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உட்பட 31 பேர…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையின் போது உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 10 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்த இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த கைதிகளுக்கும் நஷ்டஈடு வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகவும், இது தொடர்பான கோரிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான சேனக்க பள்ளேதென்ன தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சிறைச்சாலைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதுடன், நெரிசல், உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் போன்ற சிறைச்சாலை அமைப்பில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மஹர, கொழும்பு நியூ மெகசின், குருவிற்ற மற்றும் பள்ளன்சேனை ஆகிய சிறைச்சாலைகளிலும் அசம்பாவிதங்கள் பதிவாகியிருந்தன. சிறைச்சாலைகளில் உள்ள நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெறுவதில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது. மேலும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலனை மேம்படுத்துதல், அவர்களின் தொழில்முறை பயிற்சி மற்றும் புலனாய்வுத் திறன்களை அதிகரித்தல் மற்றும் பொலிஸ் செயல்திறனை மதிப்பிடுவதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துதல் ஆகியன தொடர்பிலும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.












