நாட்டில் பொது அமைதியைப் பேணிப் பாதுகாப்பதற்காக, முப்படைகளின் அனைத்து உறுப்பினர்களையும் குறிப்பிட்ட பிரதேசங்களில் விசேட கடமைகளில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிறப்பித்துள்ள அவசர உத்தரவை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று(07) நாடாளுமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவ…

நாட்டில் பொது அமைதியைப் பேணிப் பாதுகாப்பதற்காக, முப்படைகளின் அனைத்து உறுப்பினர்களையும் குறிப்பிட்ட பிரதேசங்களில் விசேட கடமைகளில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிறப்பித்துள்ள அவசர உத்தரவை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று(07) நாடாளுமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தினால் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உத்தியோகபூர்வ விசேட செய்தியை அவர் நாடாளுமன்றத்தில் வாசித்துக் காட்டியுள்ளார்.உடனடியாகப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டளையானது நாடாளுமன்றத்தின் அவசர கவனத்திற்கு கொண்டு வரப்படுவதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களின் பிரகாரமே, நாட்டின் பொது அமைதியைப் பாதுகாப்பதற்காக இந்த விசேட பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபைக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவின் கீழ், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் முதலாவது அட்டவணையில் நிச்சயம் செய்யப்பட்டுள்ள இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் அனைத்து உறுப்பினர்களும் உடனடியாகப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிராந்திய எல்லைகளுக்குள் பொது அமைதியையும், சட்டம் ஒழுங்கையும் சீராகப் பேணுவதற்காகவே முப்படையினர் இவ்வாறு களமிறக்கப்படவுள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 21(2) ஆம் பிரிவோடு சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2(3) ஆம் பிரிவின் விதிகளுக்கு அமைய, ஜனாதிபதியின் இந்தக் கட்டளை நாடாளுமன்றத்தின் தகவலுக்காகவும் மேல்நடவடிக்கைகளுக்காகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.